ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், போலீஸ் வாகனம் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. அங்கு போராட்டங்களை ஒடுக்குவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், ஆலையின் விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரெட்டியபுரம் கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பிப்ரவரி 5ம் தேதி தங்களது போராட்டத்தை துவங்கினர். அந்த போராட்டமானது இன்று 100வது நாளை எட்டியுள்ளது.
இதனையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் மற்றும் இதற்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய வியாபார சங்கத்தை சேர்ந்த சுமார் 65 கிளை சங்கங்களின் 40,000 உறுப்பினர்கள் கடைகளை அடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது தடையை மீறி மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் சுமார் 2000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.



