மும்பையில் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த எஸ்தர் அனுசுயா (23), கடந்த ஜனவரி மாதம் அவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்குச் சென்றுவிட்டு ரயிலில் மும்பை குர்லா ரயில் நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து அவர் அந்தேரி செல்ல வேண்டும்.
அப்போது அங்கு காரில் வந்த சந்திரபன் சனாப் ரூ.300 அளித்தால் அந்தேரியில் இறக்கிவிடுவதாகக் கூறினார். எஸ்தர் அனுசுயா அந்தக் காரில் ஏறிச் சென்றுள்ளார். ஆனால், பந்தூப் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அனுசுயாவை கற்பழித்து அவரை கொலை செய்து முட்புதரில் வீசினார்.
இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று வழக்கை விசாரித்த நீதிபதி, சந்திரபன் சனாப் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டது. இந்த வழக்கு அரிதினும் அரிதானது என்பதால் குற்றவாளியை சாகும் வரை தூக்கிலிடுமாறு உத்தரவிடுவதாக நீதிபதி விருஷாலி ஜோஷி கூறினார்.
தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுத கற்பழித்து கொலை செய்த குற்றவாளிசந்திரபன், என் மீது தவறாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. நான் செய்யாத குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறேன். என் மகளை நான் பார்க்க வேண்டும். இனி நான் என்ன செய்யப்போகிறேன் என்றார்.
குற்றவாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக பாதிக்கப்பட்ட அனுசுயாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்


