தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதமானது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மய்யம் விசில் செயலியில் குடிமக்களால் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் இன்று புகார்க்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில், ஒழுங்குமுறை விதிகளை அப்பட்டமாக மீறி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழலை கெடுத்ததால் ஸ்டெர்லைட்டுக்கு சுப்ரீம்கோர்ட் ரூ.100 கோடி அபராதம் விதித்தது. இத்தகைய ஆலையை எதிர்த்து மக்கள் அமைதியான முறையில் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அமைதி போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. கலவரத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய வசதிகளும் துண்டிக்கப்பட்டன, இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இவை அனைத்தும் குறித்து தாங்கள் அறிந்திருக்கும் நிலையிலும் தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அதில்..முதலாவதாக ‘துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளித்தது யார்?’ என கேட்கப்பட்டுள்ளது. 2-துப்பாக்கி சூடு நடத்த கட்டளையிடப்பட்ட சரியான இடம் எது?, 3-எவ்வகையான ஆயுதங்கள் பயன்படுத்த கட்டளையிடப்பட்டன?, 4-ஆனால் எவ்வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மக்கள் நீதி மையத்தின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்குமா? என கமல் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குளைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள கமல், மாநில அரசு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.



