சென்னை: தமிழகத்தின் இளைய சமுதாயத்தை அச்சுறுத்தும் விஷயமாக, சுமார் 50 ஆயிரம் சிறு குறுந்தொழில்கள் மூடப்பட்டுள்ளதாகவும், 5 லட்சம் வேலை வாய்ப்புகளை தமிழகம் இழந்து நிற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த ஒரு ஆண்டில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான பின்னடவை எதிர்கொண்டிருப்பதாக, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட, அத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-17 ஆண்டில் 2,67,000 ஆக இருந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், 2017-18 ஆம் நிதியாண்டில், 50,000 குறைந்து, 2,17,000 ஆக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் தொழில் முதலீடும் கடந்த ஓராண்டில் மட்டும் 11 ஆயிரம் கோடி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 36,221 கோடியாக இருந்த தொழில் முதலீடு, ரூ.25,373 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், 5 லட்சம் பேர் வரையில், வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2016-17ஆம் நிதியாண்டில் 18,97,619 ஆக இருந்த வேலைவாய்ப்பு, 2017-2018ஆம் நிதியாண்டில், 13,78,544ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது? இளைஞர்கள் போராட்டக் களத்துக்கு மட்டும் வரவேண்டும் என்று நிர்பந்திக்கும் அரசியல் கட்சிகள் காரணமா? மொழி உணர்வை, சாதி உணர்வைத் தூண்டி விட்டு குளிர்காயும் அரசியல்வாதிகள் காரணமா? லஞ்ச லாவண்யத்தில் திளைத்த திராவிடக் கட்சி அரசுகள் காரணமா? என்றெல்லாம் இப்போது பலரும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.




