குற்றாலத்தில் களை கட்டியுள்ள சீஸன்; அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குளிக்கும் பாதுகாப்பான அளவில் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறையைக் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் மே மாதக் கடைசியிலேயே தொடங்கிவிட்டது. தொடர்ந்து இரு வாரங்களுக்கும் மேலாக, மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. குற்றால சீசனின் அடையாளமான சாரலும், குளுமையான தென்றல் காற்றும் அவ்வப்போது தலை காட்டும் பலத்த மழையும் பெய்து வருவதால், மிகவும் இதமான சூழலை பயணிகள் அனுபவித்து வருகின்றனர்.

குற்றாலம் பிரதான அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இங்கும் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதனால், வரிசையில் நிறுத்தப்பட்டு குளிக்க அனுமதிக்கப் படுகிறார்கள். ஐந்தருவியின் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் விழுவதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றார்கள். மிகவும் பாதுகாப்பாகக் குளித்து மகிழும் சிறார்களுக்கான அருவியான புலியருவியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம் அலைமோதுகிறது. பழைய குற்றாலம் அருவியில் பரந்து விழும் நீரில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதால், அங்கும் கூட்டம் அலைமோதுகிறது.

குற்றாலம், ஐந்தருவியில் குளித்து விட்டு, அருகில் உள்ள எக்கோ பார்க் மற்றும் படகுக் குழாமில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் நேரம் போக்கி வருகின்றனர். படகுகளில் பயணிக்க ஏராளமானோர் வரிசையில் காத்திருக்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.