தமிழிசையை தாக்க முயன்ற போதை ஆசாமிக்கு தர்ம அடி

தமிழிசையை தாக்க முயன்ற போதை ஆசாமிக்கு தர்ம அடி

பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்தபோது திடீரென ஒரு போதை ஆசாமி தமிழிசையை மேடையேறி தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கடந்த சில மாதங்களாக அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் பாஜக நடத்திய கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் தமிழிசை அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் மேடை மீதேறி தமிழிசையை கெட்ட வார்த்தையால் திட்டியதோடு, அவரை தாக்கவும் முயன்றார். இதனையடுத்து அங்கிருந்த பாஜக தொண்டர்கள் அந்த நபரை பிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் அந்த நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழிசை கூறியபோது, ‘ஒரு கட்சியின் மாநில தலைவரை ஒரு பொது மேடையில் தாக்க முற்படும் அளவுக்கு காவல்துறையினர்களின் பாதுகாப்பு அஜாக்கிரதையாக உள்ளதாகவும், காவல்துறையினர் கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளின் கூட்டங்களுக்கும் தகுந்த பாதுகாப்பு தர வேண்டும் என்றும் அவர் கூறினார்.