பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45 ஆயிரத்தி 41 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 900 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறைவைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்தி 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.



