முக்கொம்பு கொள்ளிடம் கீழணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொள்ளிடம் கீழணையில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதை அடுத்து கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சியை அடுத்த முக்கொம்பில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் காவிரி, கொள்ளிடம் மற்றும் கால்வாய்களில் பிரித்து அனுப்பப்படுகிறது. இதில் கொள்ளிடத்தில் தண்ணீரை திறந்து விடும் மதகுகளில் 8 மதகுகள் உடைந்துள்ளன.
அந்த அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதத்தையும் கடந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பை குறைத்த போது அதில் 8 மதகுகள் உடைந்துள்ளது தெரியவந்தது. இதனால் இப்போது கொள்ளிடத்தில் கூடுதல் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. கொள்ளிடத்தில் தொடர்ந்து தண்ணீர் பாய்வதை அடுத்து, அந்த ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்லணையிலிருந்து பிரியும் ஆறுகள்: கல்லணையிலிருந்து கொள்ளிடம்,காவிரி,வெண்ணாறு, புது ஆறு என்ற நான்கு ஆறுகள் பிரிந்து செல்கின்றன.
மேலணை : மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.




