ஆனந்த விகடன் மீது தமிழக முதல்வர் வழக்கு: விகடன் தரப்பு விளக்கம்

ஆனந்தவிகடனின் ஆசிரியர், வெளியிட்டாளர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்குமீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

ஜெயலலிதா அவதூறு வழக்கு பதிவு செய்து குறித்து ஆனந்தவிகடன் கூறியுள்ளதாவது :-.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு,  தனது ஐந்து ஆண்டுகால பதவிக்காலத்தைத் தொட்டு, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் ஆகி வருகிறது. இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அமைச்சர்கள் செயல்பாடுகள் குறித்த ஸ்கேன் ரிப்போட்டுகளை கடந்த 30 வாரங்களாக ஆனந்த விகடன் வெளியிட்டு வந்தது. ‘மந்திரி தந்திரி’ என்ற பெயரில் வெளியான இத்தொடர் கட்டுரைகள் வாசகர்களுக்கு புதிதானது அல்ல. கடந்த தி.மு.க. ஆட்சியின் போதும் கருணாநிதி தலைமையில் இருந்த அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் இதேபோல் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம்.

 

அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ரிப்போர்ட்டுகளின் ஸ்பெஷல் கட்டுரையாக, முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து, ‘என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற தலைப்பில் நவம்பர் 25 தேதியிட்ட இதழில் வெளியிட்டோம்.

அது முதல் விகடன் மீது வழக்கம்போல அவதூறுகள், களங்கங்கள் ஆளும்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்’ இதழில் எழுதப்பட்டு வருகிறது. இவை நான்கைந்து நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா, சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆனந்தவிகடன் ஆசிரியர், வெளியிட்டாளர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். அந்த வழக்கை விகடன் நிறுவனம் சட்டரீதியாக எதிர்கொள்ளும்.
 

இந்த சூழ்நிலையில் ஆனந்த விகடனின் ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் முடக்கப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு அறிவிப்பும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் இருந்து விகடனுக்கு வரவில்லை. விகடன் தரப்பில் மேற்கொண்ட விசாரணைக்கும் இதுவரை பதில் இல்லை. ஃபேஸ்புக் பக்கம் முடக்கத்துக்கும் இந்த நிகழ்வுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

எத்தகைய இடையூறுகள் வந்தாலும், வாசகர்களுக்கு உண்மையைக் எடுத்துச் சொல்லும் விகடனின் பணி அனைத்து தளங்களிலும் தடையின்றி தொடரும். ஆனந்த விகடனுக்கு பக்கபலமாக இலட்சக்கணக்கான வாசகர்கள் எப்போதும் இருந்து வந்துள்ளார்கள். அதற்காக இத்தருணத்தில் வாசகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! என்று ஆனந்தவிகடன் நிர்வாகம் கூறியுள்ளது.