ரூ.1.06 லட்சம் கோடி தமிழக அரசுக்கு கிரானைட் முறைகேட்டில்  இழப்பு

 

தமிழக அரசுக்கு மதுரை கிரானைட் முறைகேட்டில் ரூ.1.06 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்படி, 7025 பக்கங்கள் கொண்ட அந்த அறிகையில், விண்ணப்பித்ததில் ஆரம்பித்து கனிம வளங்களை வெட்டி எடுத்தது வரை விதிமீறல் மற்றும் ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசுக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயம் குழு தெரிவித்துள்ளது. மொத்தம் 84 குவாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கிரானைட் முறைகேட்டை தனி நீதிமன்றம் அமைத்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என சகாயம் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள கிரானைட் கற்களை சர்வதேச சந்தையில் ஏலம்விட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மதுரை பகுதியில் நடந்த கனிம வளங்கள் முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சகாயம் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே சகாயம் தரப்பில் முதல் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சகாயம் அவரது வழக்கறிஞர்சுரேஷ் ஆகியோர் ஆஜரானார்கள், சகாயத்தின் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிகையில் உள்ள சில விபரங்கள்தான் தற்போது அதிர்ச்சி தகவலாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது