சொத்துகுவிப்பு வழக்கில் முதலமைச்சருக்கு அமலாக்கத் துறை சம்மன்

 

 .

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முதலமைச்சருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரான வீரபத்ர சிங், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய எஃகு வளத்துறை முதலமைச்சராக இருந்தவர். முதலமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

வீரபத்ர சிங் மீதான புகார் குறித்த மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்திலும், வருமான வரி தீர்ப்பாயத்திலும் நிலுவையில் உள்ள நிலையில், சிபிஐ போலீசார், வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவி மீது கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரது வீடுகளிலும் திடீர் சோதனை நடத்தினர்.

இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வீரபத்ரசிங்கின் தனிச்செயலாளரிடமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, சிபிஐயின் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு, வீரபத்ர சிங் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்க இயக்கம் அண்மையில் வழக்குப்பதிவு செய்தது. டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருக்கும் வீரபத்ர சிங், அவரது உறவினர்களுக்கு சொந்தமான இல்லங்களிலும் அமலாக்க இயக்கம் சோதனை நடத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கில் வீரபத்ர சிங்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், டெல்லியில் உள்ள அமலாக்க இயக்கத்திலுள்ள விசாரணை அதிகாரிகள் முன்பு வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வீரபத்ர சிங் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.