தமிழக மக்களை கடனாளியாக்கியதே திராவிடக்கட்சி ஆட்சியாளர்களின் சாதனை : மருத்துவர் ராமதாஸ்

 

ரூ.31 ஆயிரம் வரை தமிழக மக்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக்கியதே தமிழகத்தை ஆண்ட திராவிடக்கட்சிகளின் சாதனையாகும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், மருத்துவர் ராமதாஸ் புதுக்கோட்டையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும் அவர் தெரிவித்ததாவது :-

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் கடன் சுமை குறித்து இந்தியா ஸ்பெண்ட் எனும் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், 2014- 15 வரையில் தனிநபர் கடன் சுமை தமிழகம் முதலிடம் இருப்பதாகவும், அதில் தனிநபர் கடன் சரசாரியாக ரூ.29 ஆயிரமாக உள்ளதாகவும், அது 2015-16 ம் ஆண்டில் வாங்கிய கடனையும் சேர்த்தால் தனிநபர் கடன் சுமை ரூ. 31,132 ஆக அதிகரிக்கும். மேலும், பொதுத்துறை கடன் ரூ. 2. 01 லட்சம் கோடியையும் கணக்கில் கொண்டால் தமிழகத்தில் தனிநபர் கடன் ரூ. 60,766 ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் 108 சதவீதம் கடன் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 20110 -11 முதல் 2014-15 கடந்த 5 ஆண்டுகளில் 92 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. வருவாயில் பெரும் பகுதியை வட்டியாகச் செலுத்தும் நிலையை உருவாக்கியது தான் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் சாதனையாகும்.

மேலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த சபதத்தில் மது விற்பனையில் முதலிடம் என்பதை நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளதே தவிர ஆட்சியாளர்களின் நிலை மிகவும் செழிப்பாகவே உள்ளது. முதலமைச்சரின் அருகிலுள்ளவர்கள் சென்னையில் 11 தியேட்டர்களை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும், பல திரையரங்குகளை வாங்குவதற்கும் முயற்சி செய்து வருகின்றனர். தமிழக அமைச்சர்களும், தமிழகம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். தமிழகத்தில் ஊழல் நடக்காத துறையே இல்லை எனும் நிலைதான் உள்ளது. இந்த ஆட்சியின் 18 மிகப்பெரிய ஊழல்களின் பட்டியல் தமிழக கவர்னரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம்.

தமிழகத்தை வெள்ள நீரை வெளியேற்றும் வடிகாலாகவே காவிரியை கர்நாடக அரசு பயன்படுத்தி வருகிறது. தற்போது அததை கழிவு நீர்க்கால்வாயாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆபத்து தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் காவிரி நீரால் 25 லட்சம் ஏக்கர் பாசனமும், 5 கோடி மக்களுக்கு குடிநீருக்கும் ஆதாரமாகவும் திகழ்கிறது. இத்தகையை பெருமை கொண்ட காவிரியில் கழிவுநீர் கலப்பது பாவச் செயலாகவும். கங்கை ஆற்றை தூய்மைப் படுத்த மத்திய அரசு ரூ. 2,100 கோடியில் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதேபோல் காவிரியை தூய்மைப்படுத்தவும் கர்நாடகம், தமிழகம் இரு மாநிலங்களிலும் காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு நிதி ஒதுக்கி சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். கங்கை நதியின் தூய்மைக்கு தனி ஆணையம் ஏற்படுத்தியிருப்பது போல் காவிரி ஆறின் தூய்மைக்கும் தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இப்பகுதியில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் கறம்பக்குடி ஒன்றியத் தலைவர் கங்கையம்மாள் , சொக்கலிங்கம் ஆகியோர் தாங்கள் பகுதி பிரச்னைக்காக அமைச்சரை சந்தித்து உள்ளனர். முத்தரையர் சேர்ந்த அவர்களை பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக திட்டியுள்ளார். இதைக் கண்டித்து கடந்த 5 -ஆம் தேதி முத்தரையர் சமுதாயத்தினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். ஆனால் அந்த போராட்டத்துக்கு காரணமான அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவமரியாதைக்குள்ளான சொக்கலிங்கம் கங்கையம்மாள் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது சமூக அமைதிக்கு வழிவகுக்காது. எனவே, அமைச்சர் விஜயபாஸ்கரை பதவு நீக்கம் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரைக்கு அடுத்ததாக புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. தமிழக அரசின் அலட்சியம் காரணமாக கடந்த போட்டிக்ள நடத்தப்படவில்லை. பொங்கல் விழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நாடாளுமனத்தில் சட்டச திருத்தம் கொண்டு வர வேண்டும். மத்திய குழு வெள்ள பகுதிகளை முறையாக பார்வையிடவில்லை. ஆனால் அவர்களை சந்திப்பதற்கு இங்குள்ள அதிகாரிகள் ஏற்பாடு செய்யவில்லை. ரூ. 940 கோடி போதாது ரூ. 20 ஆயிரம் கோடி தேவை என பாமக வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து உண்மையான நிலவரத்தை மத்திய குழுவுக்கு காட்டவில்லை. அவர்களிடம் விவரம் தெரிவித்து அதிக நிதியை வாங்க முயற்சிக்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி நாடாளுமன்றத்தில் வெள்ள நிவாரண நிதி தொடர்பாக குரல் கொடுப்பார். ஜெயலலிதா கடிதம் பிரதமருக்கு போவதுக்குள் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மத்திய அமைச்சர்கள் கூறியதால் நிதி ஒதுக்கீடு செய்யதார்களே தவிர வெள்ள நிவாரண பணிகளில் அமைச்சர்கள் செயல்பாடுகள் பூஜ்யம். மக்கள் நல கூட்டணியின் செயல்பாடுகளைக்கவனித்து வருகிறோம் பாமக- வைபொறுத்தவரை எங்கள் தலைமை ஏற்று திமுக அதிமுகவை தவிர எந்தக்கட்சி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.மெகா கூட்டணி அமைப்பது குறித்து ஜனவரியில்தான் கூறமுடியும். அது தொடர்பாக திரைமறையில் பேச்சு நடத்தி வருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

சகிப்பின்மை குறித்து பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. சிந்தனையாளர் ஒருவர் கர்நாடகவில் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் எதிரொலியாக எழுத்தாளர்கள் கலைஞர்கள் விஞ்ஞானிகள் உள்ப 200க்கும் மேற்பட்டவர்கள் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளனர். இது போன்ற நிலைமை இந்தியாவில் முன் எப்போதும் இருந்ததில்லை. பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் பல்வேறு குழுக்கள், சமயங்கள், மதங்கள் பரவிக்கிடக்கும் நிலையில், சமூக நல்லிணக்கம் சமூக ஒருமைப்பாடு பேணப்பட வேண்டும் என மருத்துவர் ராமதாஸ்செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.