பெண்களை மோசமான வார்த்தைகளால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசுவதாக சோனியாவிடம் விஜயதாரணி புகார்

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெண்களை மோசமான வார்த்தைகளால் பேசுவதாக சோனியாவிடம் விஜயதாரணி புகார் கூறி அவரை

தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கக் கோரி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கடிதம் எழுதியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவருமான விஜயதாரணி, மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளதால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

தமிழக காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் அவ்வப்போது மோதல் ஏற்படுவதும் சில நாட்கள் பரபரப்பாக இருப்பதும் வாடிக்கையானது. சில நேரங்களில் சண்டை சென்னையோடு நிற்காமல் பஞ்சாயத்துக்காக அந்த கட்சியினர் புது தில்லி வரை செல்லுவது வாடிக்கையானதே .

சமீபத்தில் கூட தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை மாற்றக்கோரி குமரி அனந்தன், ப.சிதம்பரம்,வசந்தகுமார், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்பட பலர் சோனியாவை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

தமிழக காங்கிரஸ் நிலைமையை பார்த்து சோனியா வெறுத்துப் போய், யாரை தலைவராக போட்டாலும் இப்படித்தானே புது தில்லிக்கு புகாருடன் வருகிறீர்கள் என்று கோவமாக கூறியுள்ளார். அடிக்கடி பிரச்சினை கிளம்புவதே தமிழக காங்கிரசின் சாபக்கேடு என்று தொண்டர்கள் தொடர்ந்து புலம்புகிறார்கள்.

தற்போது போது சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி மூலம் சர்ச்சை கிளம்பியுள்ளது.

விஜயதாரணி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியுள்ளதாவது :-

மகளிர் காங்கிரஸ் சார்பில் கடந்த 19 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியையொட்டி வைக்கப்பட்ட இந்திரா படம் போட்ட பேனரை இளங்கோவன் ஆதரவாளர்கள் அகற்றி ஆண்கள் கழிவறையில் வீசிச் சென்றனர். அதை நானே போய் எடுத்து வந்தேன்.

இளங்கோவன் தொடர்ந்து என்னையும், எனது ஆதரவாளர்களையும் இழிவுபடுத்தும் வகையில் செயல்படுகிறார். பெண்களை மோசமான வார்த்தைகளால் பேசி காயப்படுத்துகிறார். இது பெண் வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையில், இளங்கோவன் மட்டும் காங்கிரஸ் மீது பெண்கள் அதிருப்தி கொள்ளும் வகையில் செயல்படுகிறார். அவர் பதவியில் நீடிப்பது கட்சிக்கு களங்கம். கட்சியை காயப்படுத்தி விடும்.

எனது 28 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுவரை நான் யார் மீதும் குற்றம் சொன்னது கிடையாது. இப்போது நான் வேதனை அடைந்து இருக்கிறேன். எனவே இந்த விஷயத்தில் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக காத்து இருக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு விஜயதாரணி எழுதியுள்ள புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.