சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு

 
சென்னை மாநகர புறநகர் பகுதிகளில் ஆவின் பாலுக்கு 4-ஆவது நாளாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.அம்பத்தூர், சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைக்கும் பணிகள் நடைபெறும்.
 
அங்கு மழைநீர் புகுந்துள்ளதால், பாலை பாக்கெட்டுகளில் அடைத்து எடுத்துச் செல்லும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி தடைபட்டதால், சென்னை, புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் கிடைக்கவில்லை.இன்று அதிகாலையில் இருந்து பொது மக்கள் பல மணி நேரம் காத்திருந்தும், பெருத்த ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
 
 
சூளைமேடு.வட பழனி, உள்ளிட்ட இடங்களுக்கு குறைந்த அளவிலேயே பால் பாக்கெட்டுகள் நேற்று கொண்டு வரப்பட்டன. சில முகவர்கள் அவற்றை மொத்தமாகப் பெற்றுக் கொண்டு, அரை லிட்டர் பாக்கெட்டை சுமார் ரூ.60 வரை விற்பனை செய்தனர்.
 
இந்த நிலையில் ஆரோக்கியா, ஹெரிடேஜ் போன்ற தனியார் பால் வழக்கம் போல் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், தனியார் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, மக்கள் பெற்று சென்றனர். சில கடைகளில் தகராறும் ஏற்பட்டது . இதனால், லிட்டருக்கு ரூ.20 வரை கூடுதலாக விற்கப்பட்டது.
 
முகவர்கள் பால் பாக்கெட்டுகளைமொத்தமாக வாங்கிச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒரு வீட்டுக்கு ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரையில் ரேஷன்முறையில் பால் விநியோகிக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.