
கடந்த மாதம் புழல் சிறையில் பயங்கரவாதச் செயல்களில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் டிவி., செல்போன், விளையாட்டு, சொகுசு சாப்பாடு என்ற சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும், சிறையில் இருந்தபடியே செல்போன்களில் தங்கள் சகாக்களுடன் பேசுவதும் என செய்திகள் வெளியாகி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அரசியல் கட்சியினரோ தலைவர்களோ அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் இயல்பாகவே இருந்தனர். காரணம், புழலுக்கு தங்கள் கட்சிக் காரர்கள் சென்று வந்து இவற்றை முன்னமேயே சொல்லியிருந்திருக்கலாம், அல்லது புழலுக்குச் செல்வதாயிருந்தால், தங்களுக்கும் இத்தகைய சொகுசு வசதிகள் தேவைப்படுமே என்று எண்ணுபவர்களாயிருக்கலாம்..!
ஆனால், நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள், நேர்மையை நியாயத்தை வலியுறுத்துபவர்கள் மிகவும் அதிர்ச்சி அடையவே செய்தார்கள். அவர்களின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகத்தான், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, தான் மேடையேறிப் பேசுவதைத் தடுத்த போலீஸாரிடம் சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்!
அதில் முக்கியமான ஒன்று, புழல் சிறையில் காசு வாங்கிக் கொண்டு ஊழல் செய்து இப்படி பயங்கரவாதிகளுக்கு சொகுசு வாழ்க்கை வாழ வழி செய்து கொடுத்திருக்கிறீர்களே..! நீங்கள் எல்லாம் நீதிமன்றத்தை என்ன விதமாய் மதிக்கிறீர்கள்?! உங்கள் யோக்கியதை தெரிகிறதே! எல்லாம் ஊழல்.. எங்கும் ஊழல் என்று வீராவேசமாகக் கத்தினார்.!
அப்போது போலீஸாரை அவமதித்ததாகக் கூறி, அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன. ஆனால், ஹெச்.ராஜா கேள்வி கேட்டதில் தப்பே இல்லை என்று சொல்லும் வகையில், இப்போது மீண்டும் புழல் சிறையில் பிரியாணி தயாரிக்கப் படுவதும், டிவிக்கள் வைக்கப் பட்டுள்ளதும், செல்போன்கள் சகஜமாக அளிக்கப் படுவதும் நடப்பதாக வீடியோ ஆதாரங்கள் இணையவெளியில் பரவிக் கிடக்கிறது.
ஒரே மாதத்தில் 5 முறை நடைபெற்ற சோதனைக்குப் பிறகும், புழல் சிறையில் தடபுடலாக பிரியாணி தயாரிக்கப்படுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் சோதனைகளைத் தொடர்ந்து சிறைக்குள் முறைகேடாக விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாம்.!
சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வாழ்க்கை வாழ வசதிகள் செய்து கொடுக்கப் பட்ட விவகாரம், புகைப்பட ஆதாரங்களுடன் வெளியானதை அடுத்து, 5 முறை அதிரடி சோதனை நடத்தப்பட்டு, 50 டிவி.,கள், 70 எஃப்எம் ரேடியோக்கள், சிறைக் கைதிகளுக்கு முறைகேடாக வாடகைக்கு விடப்பட்டிருந்த மருத்துவமனை கட்டில்கள், 700 கிலோவுக்கும் மேற்பட்ட பாசுமதி அரிசி, சமையலுக்கு பயன்படும் பொருட்கள், கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதை அடுத்து புழல் சிறையில் இருந்து 17 வார்டன்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சோதனைகளுக்குப் பிறகும் புழல் சிறையில் முறைகேடுகள் தொடர்வது குறித்த வீடியோ ஆதாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறைக்கு வரும் கைதிகளின் உடமைகளை வைக்கும் அறையே ஒரு குட்டி சமையல் அறையாக மாற்றப் பட்டுள்ளது. அதில் பிரியாணி சமைக்கத் தேவையான பொருட்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. தடபுடலாக பலருக்கும் உணவு தயாராவதுபோல் பெரிய பாத்திரங்களில் பிரியாணி தயாராவது, இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ஜன்னலுக்கு வெளிப்புறத்தில் தோட்டத்தில் பெரிய அளவில் பிரியாணி செய்யப் படுவது வீடியோவில் உள்ளது. மேலும், கைதி ஒருவரின் அறையில் டிவி, எஃப்எம் ரேடியோ ஆகியவை இருக்கின்றன.
இப்படி முறைகேடாக சிறைக்குள் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது ஒருபுறம் என்றால், அவற்றை கைதிகளுக்கு பல மடங்கு விலை வைத்து விற்கிறார்களாம். புழல் சிறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளுக்குப் பிறகு, முறைகேடாக விற்கப்படும் பிரியாணி, சிக்கன், மட்டன், முட்டை உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதாம்.
ஒரு பொட்டலம் பிரியாணி 500 முதல் 700 ரூபாய்க்கும், 100 ரூபாய் விற்ற முட்டை பொடிமாஸ் 200 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட 2 சப்பாத்தி 300 ரூபாய்க்கும், 50 ரூபாய் விற்ற ஆம்லேட் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என்கிறார்கள்.
ஆகவே, சிறைச்சாலைகளே ஊழல் கேந்திரங்களாகத் திகழ்கின்றன என்பதுடன், பணம் ஏகத்துக்கும் விளையாடுவதும், இவற்றுக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதும், காவல்துறையினர் எப்படி ஊழலில் திளைக்கிறார்கள் என்பதைக் கண்டு மக்கள் திகைக்கிறார்கள்!



