திருச்சி: போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் செய்தி பகிர்ந்ததற்காக புகார் அளிக்கப் பட்டு கைது செய்யப் பட்ட கரூர் நிருபர் ஆனந்தகுமாருக்கு திருச்சி நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் அளித்துள்ளது. இதை அடுத்து அவர் நாளை வெளியில் வருகிறார்.
கரூர் பத்திரிக்கையாளர் ஆனந்தகுமார் கடந்த மாதம் 22ஆம் தேதி கைது செய்யப்பட்டு 14 நாட்களாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கரூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தபடுவார் என எதிர்பா்க்கப்பட்டது. ஆனால், காணொளி மூலம் மேலும் 15 நாட்கள் சிறைக் காவலை நீட்டித்து உத்தவிட்டார் நீதிபதி.
இதனிடையே, கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிருபர் சார்பில் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தாக்கல் செய்த ஜாமீன் மனு அக்டோபர் 4 ம்தேதி வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் அக்டோபர் 5ம்தேதி வரை அவகாசம் கோரியதால் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன், வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் வாதத்தை கேட்டார்.
நிருபர் ஆனந்தகுமார் மீது போடப்பட்ட சட்டப் பிரிவுகள் பொருந்துவதாக இல்லை என்று வழக்கறிஞர் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நிருபரின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள், மற்றும் காவல் துறையால் பதியப்பட்ட வழக்கு பிரிவுகளின் தன்மைகள் குறித்து அரசு வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டார்.
அதற்கு அரசு வழக்கறிஞரால் சரியான விளக்கம் அளிக்க இயலவில்லை. ஆனால், பின்னர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் பொழுது சரியான சட்டப் பிரிவுகளை மாற்றி பதிவு செய்து, காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்றார். இது நீதிமன்றத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிருபர் ஆனந்த் குமார், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால், அவர் மீது பொருத்தமற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்றும், காவல் துறை திட்டமிட்டு தவறாக பதிவு செய்திருக்கிறது என்றும் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கூறினார். மேலும், காவல் துறையினரின் நடவடிக்கை, தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், கருத்து வெளியிடும் உரிமையை பாதிப்பது என்றும் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மதியம் 2 மணிக்கு மேல் வழக்கை ஒத்திவைத்தார்.
தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு மேல் நிருபர் ஆனந்தகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார். நிருபர் ஆனந்தகுமார் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மாதத்துக்கு வேலை நாட்களில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.




