மழை வெள்ளத்தால் குடிசை வீடுகளை இழந்தோருக்கு நிரந்தர வீடுகள் : முதலமைச்சர் அறிவிப்பு

 
கனமழை வெள்ளத்தால் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
 
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிக அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
 
மழை வெள்ளத்தால் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை இழந்த பள்ளி மாணாக்கரது நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஒரு ஜோடி சீருடை வழங்க ஆணையிடப் பட்டுள்ளது .
 
இதுவரை 37707 பள்ளி மாணக்கர்களுக்கு பாடப் புத்தகங்களும், 26865 மாணாக்கர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும், 9306 மாணாக்கர்களுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மழை வெள்ளத்தால் குடும்ப அட்டைகளை இழந்த மக்களுக்கு, நகல் குடும்ப அட்டைகள் வழங்கவும் என்னால் ஆணையிடப்பட்டு, நகல் குடும்ப அட்டைகள் துரிதமாக வழங்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட மேற்சொன்ன ஆவணங்களை இழந்த பொது மக்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க நான் உத்தரவிபட்டுள்ளன.
 
இதற்காக சிறப்பு முகாம்கள் வருவாய் வட்டங்களிலும், கல்வி சான்றிதழ்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வருகின்ற 14.12.2015 முதல் இரண்டு வாரங்களுக்கு நடத்த நான் உத்தரவிட்டுள்ளேன். இம்முகாம்களில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ஒரு வாரத்திற்குள்ளாக நகல் ஆவணங்களை கட்டணமின்றி வழங்குவர். சிறப்பு முகாம்களில் மட்டுமன்றி, பொதுமக்கள் விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மூலமாகவும் கொடுத்து நகல் ஆவணங்களைப் பெறலாம்.
 
தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 57(5)-ன்படி, இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிலம்/வீட்டுமனை சொத்து தொடர்பான பத்திர நகல்கள் யாவும் மூல ஆவணங்களாகக் கருதப்படும்.
 
ஆட்டோ ஒட்டுநர்கள் பலர் ஒட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகனப் பதிவுச் சான்று ஆகியவற்றை இந்த மழை வெள்ளத்தால் இழந்துள்ளனர். இந்த ஆவணங்களும் இதே நடைமுறைப்படி வழங்கப்படும். மழை வெள்ளத்தால் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5000/-ம், குடும்பத்திற்கு 10 கிலோ அரிசியும் வழங்க நான் ஏற்கெனவே ஆணையிட்டதன் அடிப்படையில் இந்த நிவாரண உதவிகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன என
கூறப்பட்டுள்ளது .
 
கனமழை வெள்ளத்தால் பாதித்த மக்களின் துயர் துடைக்கும் வகையில் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 5,000 ரூபாயும், ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் 10 கிலோ அரிசி ஆகியவற்றை சிறப்பு வெள்ள நிவாரணத் தொகுப்பாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேற்காணும் தொகையானது, பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வேட்டி, சேலை மற்றும் அரிசி ஆகியவை சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளன.
 
மேலும் வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்கள் குடிசை ஒன்றுக்கு 5,000 ரூபாய் மற்றும் சிறப்பு நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் என மொத்தம் 10,000 ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை பெறுவர். நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்புக்கு உள்ளானோர் 5,000 ரூபாய், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை நிவாரணமாக பெறுவார்கள்
 
மழையின் காரணமாக குடிசை வீடுகளை இழந்த அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் கட்டித் தரப்படும். சென்னை மாநகரில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் கரையோரங்களில் குடிசை வீடுகளில் தங்கி இருந்தவர்கள் தங்கள் வீடுகளை இழந்து விட்டனர். ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள 10,000 குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இவர்களுக்கு உடனடியாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
 
பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுக்கும் பணிகளை உடனடியாக துவங்கவும் அந்த கணக்கெடுப்புகள் முடிந்தவுடன் ஒரு சில தினங்களில் உடனடியாக வெள்ள நிவாரணத்தை தமிழக வழங்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.