கும்பகோணம் சிவன் கோயில் ஒன்றில் கருவறையில் பற்றி எரிந்த தீ ! தொடரும் ஆலய தீவிபத்துகளால் பாதகமா?

Published:

கும்பகோணம்:

கும்பகோணத்தில் உள்ள பழைமையான சிவன் கோவில் ஒன்றில் இன்று மதியம், கருவறையில் விளக்கு தட்டி எண்ணெய் விழுந்து தீ பற்றியது. இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.

தமிழகத்தில் அண்மைக் காலமாக ஆலயங்களில் தீவிபத்துகள் நடப்பது அதிகரித்துள்ளது. கடந்த பிப்.2ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு, பழம் பெருமையும், கட்டடக் கலை உன்னதத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அடுத்து திருவாலங்காடு தல மரம் தீப்பற்றியது. வேலூர் சத்துவாச்சாரி அம்மன் கோவில் தேர் தீப்பிடித்தது. கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலில் சமையலறை பக்கம் தீப் பிடித்தது. இதனால் பக்தர்களிடையே பயவுணர்வு நிலவி வருகிறது.

இந்தத் தீ விபத்துகளால் நாட்டில் ஏதும் பெரும் கலவரம், இயற்கைச் சீற்றம், ஆட்சி மாற்றம், தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என ஏற்படுமோ என்று பக்தர்களிடையே பயம் நிலவி வருகிறது. இதனால் பெண்கள் பலர் வீட்டு வாசல்களில் விளக்கேற்றியும் குல தெய்வக் கோவில்களுக்குச் சென்று பரிகார பூஜைகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குடந்தையில் மாசி மகத் திருவிழா கும்பகோணம் பகுதியி உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாமகம் தொடர்புடைய ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் கடந்த 13 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. உணவுப் பொருள்கள் செய்யும் இடத்தில் சிலிண்டரில் பற்றிய தீயை அங்கிருந்தோர் உடனே அணைத்தனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் சாலையில் அமைந்துள்ளது, மகாமகத் திருவிழா தொடர்புடைய கோவில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். இந்தக் கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான இந்தக் கோவிலின் சுந்தரேச குருக்கள் பூஜை செய்து வருகிறார். இன்று வழக்கம் போல் காலை கோவிலுக்கு வந்த அவர் சுவாமிக்கு நித்ய பூஜைகளை நடத்தி விட்டு, மதியம் 12 மணி அளவில் கருவறையில் பூஜைகளை முடித்து விட்டுத் திரும்பினார். அப்போது அருகில் எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கு சரிந்து, அதில் இருந்து சிதறிய எண்ணெய் சுவாமி விக்ரஹத்தின் மீது பட்டு, பெருமானுக்கு சாற்றப் பட்டிருந்த வஸ்திரத்தில் தீப் பிடித்தது.

இதைக் கண்டு பதறிய குருக்கள் வெளியில் ஓடிவந்தார். தீயை அணைக்க தண்ணீர் எடுத்து வர ஓடினார். அவர் வருவதற்குள் தீ மளமளவெனப் பற்றியது. அது கருவறையில் திறந்திருந்த பீரோவில் அம்மனுக்கு சாத்துவதற்காக அடுக்கி வைக்கப் பட்டிருந்த புடவைகளிலும் பற்றியது. இதனால் அச்சமடைந்த குருக்கள் சுந்தரேசன் தீ விபத்து பற்றி கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களிடம் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் நிலைய தீயணைப்பு அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி மேலும் தீ பரவாமல் தடுத்தனர்

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்தத் தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள், வேட்டிகள், நகைகள், திருவாசி, சுவாமி மற்றும் அம்மனுக்கு சாத்தப் படும் பித்தளைப் பொருட்களான கவசங்கள், கற்பூர தாம்பாளங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது. கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடரும் ஆலய தீவிபத்துகள், பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அசம்பாவித சம்பவத்தால் அச்சமடைந்த பக்தர்கள் சிலர், சனீஸ்வரர் சன்னிதியில் எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Related articles

Recent articles

spot_img