புதன், வியாழன் இருநாள் சென்னையில் கனமழை இருக்குமாம்: சொல்வது பிபிசி

சென்னை:

கனமழை பெய்து சென்னையைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், அங்கங்கே வெள்ள நீர் ஓரளவு வடிந்து வருகிறது. சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழைப் பொழிவு இல்லாமல் இருந்ததால், மீட்புப் பணிகள் தடங்கலின்றி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வரும் டிச.9, 10 இரு தினங்களில் கன மழை சென்னையில் இருக்கும் என்று பிபிசி வானிலை அறிக்கை குறிப்பிடுவது, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன், வியாழன் இரு தினங்களில் சென்னையிலும், சுற்றுப் புறங்களிலும் கனத்த மழை பெய்யக்கூடும் என்று பிபிசி வானிலை அறிக்கையின் படம் காட்டுகிறது. இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் இந்த படங்களை மையமாக வைத்து, மழை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நம் செயற்கைக்கோள் படங்களை வைத்து, இன்று இரவுதான் துல்லியமாக கணித்து நாளை கூற முடியும்” என்று சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மீட்புப் பணிகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, உடை கொடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளதால், வீடுகளை சுத்தம் செய்யும் பணிக்காக தங்கள் இருப்பிடங்களுக்கு சிலர் திரும்பியுள்ளனர். மேலும், செம்பரம்பாக்கம் ஏரி நீர் அடையாற்றில் திறந்து விடுவது குறைக்கப் படவில்லை. இந்நிலையில், மேலும் கன மழை பெய்தால், மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படும் என்று சென்னை வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.