தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி : முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 கோடி நிதி உதவி வழங்கப்படும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் அனைத்தும் பாராட்டுக்குறியது என்றும் கூறியுள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்து வரும் வரலாறு காணாத பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனிமனிதர்களும் தங்களின் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் கர்நாடகா, பிகார், ஒரிசா மாநில முதலமைச்சர்கள் தலா ரூ.5 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கனமழையால் பாதிக்கபட்டுள்ள தமிழகத்திற்கு ரூ.25 கோடி நிதி உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளதாக அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.