செங்கோட்டை: சபரிமலை பாரம்பரிய ஐதிகங்களை பாதுகாக்க வேண்டி அச்சன் கோவில் க்ஷேத்திர கமிட்டி மற்றும் திருஆபரண கமிட்டி சார்பாக அச்சன் கோவிலில் ஐயப்ப சரண கோஷத்துடன் ஊர்வலம் நடைபெற்றது.
அச்சன்கோவில் நடைப்பந்தலில் தொடங்கிய ஊர்வலம் ஊர் எல்லை வரை சென்று பின் தர்மசாஸ்தா கோவில் சுற்றி நிறைவுபெற்றது. நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் பக்தைகளும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சபரிமலையில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வரும் ஐதிகங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது.
பெண்கள் தாங்கள் இப்போது சபரிமலைக்குச் செல்ல மாட்டோம்; 50 வயது நிறைந்த பின்னரே நாங்கள் சபரிமலைக்குச் செல்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட முக்கியமானவர்கள் அச்சன்கோவில் க்ஷேத்திரகமிட்டி தலைவர் சத்தியசீலன் செயலர் உண்ணி, துணைத் தலைவர் கோபி, ரகு ஆபரணபெட்டி கமிட்டி தலைவர் ஹரிஹரன், தென்காசி ஐயப்பா சேவா சங்க தலைவர் அழகிரி, செயலர் ராமு உள்ளிட்ட சங்கத்தினர், அச்சன் கோவில் திருஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி தென்காசி செயலர் மாடசாமி உள்ளிட்ட கமிட்டியினர் மற்றும் அச்சன்கோவில் வார்டு உறுப்பினர் கீதா சுகுநாத் உள்ளிட்ட பெண்களும் பொதுமக்களும் இந்த ஊர்வலத்தில் திரளாகக் கலந்து கொண்டனர்.




