குமரி மாவட்டம், சுசீந்திரம் ஊரில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் கேரளா மாநிலத்தில் பத்மநாப சுவாமி கொலுவிருக்க சென்றார். கேரளா மற்றும் தமிழக காவல் துறை அலுவலகர்கள் சார்பாக ஆன்மிகவாதிகள் வழி அனுப்பி வைத்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்பதற்காக, பத்மநாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சி அரண்மனை வளாகத்தில் அக். 7ஆம் தேதி இன்று நடைபெற்றது. முன்னதாக, முன்னுதித்த நங்கை அம்மன் பத்மநாபபுரம் சென்றடைந்தார்.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்பதற்காக, குமரி மாவட்டத்திலிருந்து சரஸ்வதி அம்மன், முன்னுதித்த நங்கை அம்மன், அருள்மிகு குமாரசுவாமி ஆகிய சுவாமிகளின் விக்ரகங்கள் எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது.
நிகழாண்டு நவராத்திரி பூஜை அக்.10ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த பூஜையில் பங்கேற்க குமரி மாவட்டத்திலுள்ள சுவாமிகள் பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திலிருந்து அக்.7 ஆம் தேதி இன்று புறப்பட்டுச் செல்கின்றனர்.
முன்னதாக, அக். 6ஆம் தேதி நேற்று மாலை சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனும், 7ஆம் தேதி இன்று அதிகாலையில் வேளிமலை அருள்மிகு குமார சுவாமியும் புறப்பட்டு, பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திலுள்ள தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் கோயிலை சென்றடைந்தனர்.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பிறகு 1840–ம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இந்த விழாவில், குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் பங்கேற்பது வழக்கம். இதற்காக இந்த சிலைகள் திருவனந்தபுரத்திற்கு யானை, பல்லக்கு மீது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி விழாவில் வைத்து பூஜைகள் செய்வார்கள்.
தொடர்ந்து இன்று சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பூஜை முடிந்து அம்மன் வெளியே வரும் போது துப்பாக்கி ஏந்திய கேரள போலீஸார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
பின்னர் சரஸ்வதி அம்மன் யானை மீதும், இருபுறமும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமியும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பூஜை நடத்தப்பட்டு குமரி மாவட்ட தேவஸம் போர்டு ஊழியர் மன்னரின் உடை வாளை முன்னே எடுத்துச் செல்ல, சரஸ்வதி அம்மன் பவனி அரண்மனை வளாகத்தை வந்தடைந்தது.
அரண்மனை வளாகத்தில் நடைபெறும் பூஜைக்கு பின்னர் பிடி காணிக்கை செலுத்தப்பட்டு, தொடர்ந்து பவனியாக அம்மன் திருவனந்தபுரத்துக்குச் சென்றார்.
நவராத்திரி பூஜை முடிந்த பிறகு சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரத்திலிருந்து 21ஆம் தேதி புறப்பட்டு 23ஆம் தேதி பத்மநாபபுரம் வந்தடைகிறார்.
முன்னதாக அரண்மனை உப்பரிகை மாளிகையில் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. மன்னரின் உடைவாள் சரஸ்வதி அம்மன் பவனிக்கு முன்னால் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், கேரள மாநில தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன், தேவஸம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் காணொளிக் காட்சி…




