சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கையைக் காப்பாற்ற சாகும் வரை போராடத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகரும் எம்.பி,யுமான சுரேஷ்கோபி!
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.
1840ஆம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் நவராத்திரி விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன்,பத்மநாபபுரம் தேவாரக்கொட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சுவாமி விக்ரஹங்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வரும் 10ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரஹம் நேற்று அக்.6ம் தேதி ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றது. அப்போது கேரள, தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ்கோபி கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி, சபரிமலை தீர்ப்பு என்பது தனி விஷயம். அது குறித்து நான் அரசியல் ரீதியாக எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்பது வேறு, மத நம்பிக்கை என்பது வேறு. நாங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். பாரம்பரிய கலாசாரம், மத நம்பிக்கையை காப்பாற்ற சாகும் வரை போராடவும் தயாராக உள்ளேன். போராட்டத்துக்கு முன் நிற்கவும் தயாராக உள்ளேன் என்று கூறினார்.




