குடிமைப்பணி தேர்வுகளை ஒத்திவைக்க ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:
மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய குடிமைப் பணி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட 27 வகையான அனைத்திந்திய அளவிலான பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான குடிமைப்பணித் தேர்வுகளின் முதன்மைத் தேர்வுகள் இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.
குடிமைப் பணித் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் இப்போது தான் மழை& வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தை கடந்த ஒரு மாதமாக மழை & வெள்ளம் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலமும், தமிழகத்தை ஒட்டிய ஆந்திர மாவட்டங்களும் மழை&வெள்ளத்திற்கு தப்பவில்லை.
சென்னையிலும், மற்ற பகுதிகளிலும் ஏற்பட்ட மழை&வெள்ளத்தில், குடிமைப்பணிக்கான முதன்மைத் தேர்வுகளுக்காக தயாராகி வந்த மாணவ, மாணவியரின் புத்தகங்கள், கடந்த கால வினாத் தாட்கள், தரவுகள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டு விட்டன. தேர்வுக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில் அனைத்தையும் மீண்டும் திரட்டி தயாராவது என்பது சாத்தியமானது அல்ல. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் தேர்வுக்கு தயாராவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது.
தேர்வுக்கு தயாராவது ஒருபுறமிருக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், கடலூர் பகுதியிலும் உள்ள மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக அனுபவித்த துயரம் மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். வெள்ளத்தின் கோரத் தாண்டவத்திற்கு உடைமைகள், ஆடைகள், பாட நூல்களை இழந்தது, கண் எதிரிலேயே குடும்ப உறுப்பினர்களை வெள்ளத்திற்கு பலி கொடுத்தது, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறி அகதிகளைப் போல முகாம்களில் தங்கியிருந்தது, உணவும், உறக்கமும் இன்றி தவித்தது உள்ளிட்ட கோர நினைவுகள் மனதை அழுத்திக் கொண்டே இருப்பதால், இவற்றை அகற்றி விட்டு பாடங்களை மனதில் நிலை நிறுத்துவது இப்போதுள்ள நிலையில் மாணவர்களுக்கு நடைமுறை சாத்தியம் அல்ல.
இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை எழுதுவோரில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மனதளவில் தயாராக நிலையில் முதன்மைத் தேர்வுகளை நடத்துவது அவர்களின் சமவாய்ப்பை பறித்து விடும். எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மனதளவில் தயாராக வசதியாக குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உடனடியாக அறிவுறுத்த வேண்டும்.