வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இன்று வாகன பழுது நீக்கும் முகாம்கள்

சென்னை:

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பழுது நீக்கும் சிறப்பு முகாம்கள் இன்று நடக்கின்றன. முகாம் நடக்கும் இடங்கள் குறித்த பட்டியல், தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள், சொகுசு வாகனங்கள் என பல ஆயிரக் கணக்கான வாகனங்கள் சேத மடைந்தன. இவற்றில், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை, யமஹா, பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஐஷர் நிறுவனங்கள் இலவசமாக பழுது நீக்கி தருவதாகவும், இதற்கான சிறப்பு முகாம்கள் இன்று (டிச.12) முதல் வரும் 21-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதன்படி, 4 மாவட்டங்களிலும் முகாம்கள் நடக்கும் இடங்கள், நடத்தும் நிறுவனங்கள் பட்டியல், தமிழக அரசின் https://www.tn.gov.in/whatsnew இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியல்படி, ராயல் என்பீல்டு நிறுவனத்தின், சென்னை, அண்ணாநகர் சதர்ன் மோட்டார்ஸ், ஆயிரம் விளக்கு பகுதியில் வேலவன் மோட்டார்ஸ், காஞ்சி புரத்தில் ஜெட் பிளேஸ் மோட்டார்ஸ், கடலூரில் செல்லங்குப்பம் ரூஸ்டர் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட 13 முகவர்கள் சிறப்பு முகாமில் பங்கேற்கின்றனர்.

யமஹா இந்தியா நிறுவனத்தின், சென்னை நங்கநல்லூர் பைக்கர்ஸ், அண்ணாசாலை பாரஸ் யமஹா, ஜாபர்கான்பேட்டையில் உள்ள மோட்டார்ஸ், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஆனந்த் யமஹா, திருவள்ளூர் மணவாளன் நகர் சம்பத்ராஜ் மோட்டார்ஸ், கடலூர், இம்பீரியல் சாலையில் உள்ள விஎம்எஸ் பைக்ஸ் உள்ளிட்ட 14 முகவர்கள் முகாம் நடத்துகின்றனர்.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை அடையாறு ராம்கே மோட்டார்ஸ், தாம்பரம் சத்யா மோட்டார்ஸ், புது வண்ணாரப்பேட்டை வாரி மோட்டார்ஸ், அண்ணா நகர் கிழக்கில் குட்வில் ஆட்டோ மோட்டிவ், திருவள்ளூரில் ராகவா மோட்டார்ஸ், காஞ்சிபுரம் சாரதா மோட்டார்ஸ், கடலூர் மாவட்டம் வடலூரில் செம்பை ஏஜென்சீஸ், பண்ருட்டி திருவத்திகையில் உள்ள ஜெய்சக்தி டிவிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 90 முகவர்கள் முகாம் நடத்துகின்றனர்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சார்பில், சென்னை, திருவான்மியூரில் உள்ள அரோகி ஆட்டோ சர்வீஸ், ரெட்டேரி ஜே.கே.ஏஜென்சீஸ், திருவொற்றியூர் ஜெயம் ஆட்டோ கேர், ஆழ்வார் திருநகர் வினெக்ஸ் ஆட்டோமொபைல்ஸ், திருநின்றவூர் ஏபிஎஸ் மோட்டார்ஸ், முகப்பேர் மேற்கு எஸ்.வி.எஸ். ஆட்டோமொபைல்ஸ் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை விஎம்ஸ் மோட்டார்ஸ் உட்பட 34 முகவர்கள் முகாம் அமைத்துள்ளனர்.

ஆட்டோக்களை பொறுத்த வரை, டிவிஎஸ் நிறுவனம் சார்பில், ஈக்காட்டுத்தாங்கல் சாய் ஆட்டோமொபைல்ஸ், பம்மல் சாய் சக்தி ஆட்டோ, சிந்தாதிரிப் பேட்டை சாய் ஹரி மோட்டார்ஸ், எருக்கஞ்சேரி எஸ்.பி.எம். மோட்டார்ஸ், ஆவடி மக்கா மோட்டார்ஸ், காஞ்சிபுரம் சபரி ஆட்டோமொபைல்ஸ் ஆகிய 6 இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

முகாம் நடக்கும் இடங்கள், நடத்தும் முகவர்கள், அதில் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் கைபேசி எண் ஆகியவை அரசு இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.

வாகன பழுது குறித்த தகவல் தருவதுடன், உதிரி பாகங்களுக்கு உரிய சலுகை விலையில் பாகங்கள் வழங்கப்படும் என்றும், பழுது நீக்கும் பணிக் கட்டணம் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.