முடங்கிய அதிமுக அரசு நிர்வாகம்..!! : பகல் கனவில் திமுக..!!

 
 
தமிழகத்தில் கொட்டிய பேய் மழையின்போது, அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை. தமிழக அரசு நிர்வாகம்முடங்கி போய்விட்டது என்பதே பொதுவாக தமிழக மக்களால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டு.
 
இந்த குற்றச்சாட்டில் எந்த ஒரு மாறுபட்ட கருத்தும் இல்லை.கனமழை, வெள்ள நேரத்தில் அதிமுக அரசின் நிர்வாகம் உண்மையாகவே சரியாக இயங்கவில்லை.நிர்வாகம் முழுமையாக முடங்கி கிடந்தது.
 
இதனால் மக்கள் பல துன்பங்கள், துயரங்களுக்கு ஆளானார்கள்.இதன் காரணமாக தீபாவளிக்கு முன்பு மக்களிடையே அதிமுகவிற்கு இருந்த செல்வாக்கு, கனமழை, வெள்ளத்திற்கு பிறகு கிடுகிடுவென சரிந்தது.
 
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.இதனால், சுறுசுறுப்பு அடைந்துள்ள திமுக, மழை, வெள்ளத்தில் தற்போது அரசியல் நடத்தி வருகிறது என்பது மிகத் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
 
கனமழைக்கு அதிமுகவே காரணம் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.மழை, வெள்ளத்தை பயன்படுத்தி அதிமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது திமுக. இதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடுவோம் என திமுக தரப்பு பகல் கனவு கண்டு வருகிறது.ஆனால், ஒன்றை மட்டும் திமுக தலைமை மறந்துவிட்டது என்றே கூறலாம்.
 
தமிழக மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அதிமுக மீது எந்த அளவுக்கு கோபத்துடன் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு திமுக மீதும் வெறுப்புடன் இருக்கிறார்கள்.பொதுமக்களிடையே கலந்து பேசும்போது இது மிக நன்றாக தெரிய வருகிறது.
அதிமுக, திமுக இரண்டும் தேவையில்லை என்ற நிலைக்கு தமிழக மக்கள் தற்போது வந்துவிட்டார்கள்.
 
இதன் காரணமாகதான், இதுவரை திமுகவுடன் கூட்டணி அமைக்க தயாராக இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், திடீரென தற்போது தமது தொண்டர்கள் திமுக வேண்டாம் என கூறுவதாக தெரிவித்துள்ளார்.மக்கள் நலக் கூட்டணியை பாராட்டியுள்ளார்.
இதன்மூலம் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியிலும் அவர் இறங்கி விட்டார் என்றே கூறலாம்.ஆனால், அதிமுக, திமுகவை வீழ்த்த வலுவான அணி இருந்தால்தான் முடியும்.
 
மக்கள் நலக்கூட்டணி இனி எப்படி செயல்பட போகிறது. அந்த கூட்டணியில் தேமுதிக இணைந்து புதிய புரட்சியை ஏற்படுத்துமா.?
அதற்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா.?
 
இவையெல்லாம், அதிமுக, திமுக கட்சிகளின் அடுத்த நகர்த்தலை வைத்துதான் தெரியவரும்.
 
ஆனால் ஒன்று மட்டும் உறுதி, மழை, வெள்ளத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதிமுகவை வீழ்த்திவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு நிச்சயம் நிறைவேறாது.
 
அதிமுக அளவுக்கு திமுகவையும் தமிழக மக்கள் புறக்கணிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதே அதற்கு காரணம்.
 
– எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் –
    பத்திரிகையாளர்.