ஜெயலலிதா முதலமைச்சரா வரும்போதெல்லாம் ‘தண்ணி’ல தமிழகம் தத்தளிக்குது: விஜயகாந்த்

முதலமைச்சராக ஜெயலலிதா வரும்போதெல்லாம் தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பண்டைய காலத்தில் பஞ்சம், பசி, பட்டினி கொடுமைகளால் உணவுப்பொருட்களை பறித்துக்கொள்ளும் நிலை இருந்ததுபோல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும்போது, ஒரு சிலரால் நிவாரண பொருட்கள் பறித்துக்கொள்ளப்பட்டதாக தன்னார்வலர்கள் கூறினார்கள். ஆனால் தற்போது வரும் செய்திகள் அதையும் மிஞ்சியுள்ளது. தமிழகம் முழுவதிலுமிருந்து தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பலதரப்பட்ட உதவியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்திட நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும்போது காவல்துறையின் துணையோடு அதிமுகவினர் அடாவடி செய்து அதை பறித்துக் கொள்வதாகவும், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் குவித்து வைத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தையும், அதிமுக கட்சி சின்னத்தையும் நிவாரணப் பொருட்களின்மீது ஒட்டி, அமைச்சர், எம்.எல்.ஏ, எம்.பி போன்றவர்களை வைத்து, அதிமுக கட்சியின் சார்பில் உதவி செய்வதைப் போன்ற போலியான நாடகத்தை அரங்கேற்றுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்.

“எரிகின்ற வீட்டில், பிடுங்கிய வரை லாபம்” என்பதைப்போல, அதிமுகவினர் இவ்வளவு தரம்தாழ்ந்து நடந்துகொள்ளலாமா? ஆட்சி அதிகாரத்தை பதினைந்து ஆண்டுகாலம் அனுபவித்து, அதன் மூலம் வரைமுறையே இல்லாமல் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்ட அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் அந்த பணத்தில் நிவாரண உதவிகளை வழங்கலாம் அல்லவா? அதிமுக நகர செயலாளரே நூறு கோடிக்கு சொத்து வைத்திருக்கிறார், அப்படி இருக்கையில் அம்மா ஆயிரம் கோடிக்கு சொத்து வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறதென, அதிமுக அமைச்சரே பொதுமேடையில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவ்வளவு வசதி வாய்ப்புகளை கொண்டுள்ள அதிமுக அமைச்சர்கள்,

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள் பிற பதவிகளில் இருப்பவர்கள், தாங்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை எடுத்து, நிவாரண உதவிகளுக்கு செலவு செய்யலாம் அல்லவா? அதை விடுத்து அடுத்தவர் சொத்துக்கு உரிமை கொண்டாடுவது கேவலமாக இல்லையா?

மேலும் தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என அனைத்து தரப்பினரையும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உருட்டல், மிரட்டல் மூலம் பேசி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை இலவசமாவே பெறுவதாகவும், ஆனால் பணம் கொடுத்து நிவாரணப் பொருட்களை வாங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் சம்பந்தபட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.

தமிழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விஷன் 2023ல் பல திட்டங்கள் போடப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஆனால் தற்போது சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறதே, விஷன் 2023 என்னவானது? தென்பெண்ணையாறு, பாலாறு நிரம்பி வழிந்து மழைநீர் வீணாக கடலில் கலந்தது. அதை தடுத்திட ஏதேனும் திட்டம் இருந்ததா? எந்த திட்டமும் போடாமல், போட்ட திட்டங்களையும் கிடப்பில் போட்டு, தமிழகத்தை நிர்மூலமாக்கியதுதான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை.

அவர் ஆட்சி காலத்தில் 1992ல் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகத்தில் 48 பேர் பலியாகினர். 2004ல் சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2005ல் மழை வெள்ளத்தால் உயிரிழப்பும், பலத்த பொருட்சேதமும் ஏற்பட்டது. 2012ல் தானே புயலால் உயிரிழப்பும், கடும் பொருட்சேதமும் ஏற்பட்டது. முதலமைச்சராக ஜெயலலிதா வரும்போதெல்லாம் தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதும், கடும் சேதம் ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதும், அதன்பின் நடைபெறும் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை இழப்பதும் வாடிக்கையாக நடந்துவருகிறது.

தற்போது 2015லும் கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்றே மழை வெள்ளத்தால், உயிரிழப்பும், பலத்த சேதமும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால், சுமார் 15 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு, சேதமடைந்து, உடைமைகளையும், பொருளாதாரத்தையும் இழந்து அதிலிருந்து மீண்டுவர வழிதெரியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் தடுமாறுகின்றனர். விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து நிற்கிறார்கள். வணிக நிறுவனங்களில் தண்ணீர் புகுந்து, பொருளாதாரம் ஸ்தம்பித்து, மீண்டும் தொழில் செய்ய இயலாமல் வணிகர்கள் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளனர். ஆனால் சுமார் ஒருவார காலம் சென்னை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டும், அதிமுக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் மட்டும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மது வியாபாரம் கனஜோராக நடந்தேறிய கொடுமையும் நிகழ்ந்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கூடுதல்நிதி வேண்டுமென, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை கேட்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், வணிகர்கள் போன்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பிற்கும், சேதத்திற்கும் அவர்கள் யாரிடம் சென்று நிதி கேட்பார்கள். உண்மையான பாதிப்பு அப்பாவிகளான இவர்களுக்கு தானே தவிர வேறு யாருக்கும் இல்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை தமிழகம் அடைந்தாலும், ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை இழந்தும், அதிமுக அரசு இதில் பாடம் கற்றுக்கொள்ளாமல், பாதிப்பையும், சேதத்தையும் நிரந்தரமாக தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையையும் இதுவரையிலும் எடுக்கவில்லை. இது தொடர்ந்தால் வரலாறு காணாத மழை வெள்ளம், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வரலாற்றையே அழித்துவிடும் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

–  என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.