பெண் உதவி ஆய்வாளருக்கு செக்ஸ் டார்ச்சர்: காவல் உதவி ஆணையர் மீது புகார் கொடுக்க வராதீங்க என்று உளவு!

திருச்சி:
திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவல் உதவி ஆணையாளர் ஒருவர் அவருக்கு கீழ் நிலை பதவியில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் 3க்கும் மேற்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பல மாதங்களாக ‘செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்து வந்ததாக புகார் எழுந்துவருகிறது.

பல மாதங்களாக பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்து வரும் உதவி ஆணையாளரின் பெயர் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கான விருது பெறுவோர் பட்டியலிலும் உள்ளதாம். பாதிக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளர் பெயரும் விருது பெறுவோர் பட்டியலில் பட்டியலில் உள்ளதாம். இந்த நிலையில் உதவி ஆணையாளர் நகரின் மையப் பகுதியில் பணியாற்றும் ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கைபேசி மூலம் கொடுத்த ‘செக்ஸ்’ டார்ச்சரை சமாளிக்க முடியாமல் அவரது கணவரிடம் கூறி கண்ணீர் விட்டாராம். மேலும் உதவி ஆணையாளர்ஆபாசமாகப் பேசியது முழுவதையும் பெண் காவல் உதவி ஆய்வாளர் உயர் அதிகாரிக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த கணவர் அவரது மனைவிக்கு காவல் உதவி ஆணையாளர் கைபேசி மூலம் பேசி ‘செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்ததை சி.டி.யாக தயார் செய்து புகார் மனுவுடன் திருச்சி மாநகர காவல் ஆணையாளர் சஞ்சய் மாத்தூரிடம் இன்று 14-12-2015 காலை 11.00 மணிக்கு கொடுக்க இருப்பதாக தகவல் பரவியது. தகவல் அறிந்த ஊடகத் துறையினர் உடனடியாக காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு குவிந்தனர். ஆனால் பெண் காவல் உதவி ஆய்வாளரின் கணவர் வரவில்லை. அவர் பிற்பகலில் புகார் கொடுக்க வருவதாகக் கூறப்பட்டது.

ஊடகத்துறையினர் காவல் ஆணையாளர் அலுவலகம் முன் குவிந்த நிலையில் காவல் ஆணையாளர் சஞ்சய் மாத்தூர் அலுவலகத்திற்கு வந்தார். அதன் பின்னர் சஞ்சய் மாத்தூரிடம் ‘செக்ஸ்’ டார்ச்சர் புகார் அளிக்க வருவதாக சொல்லப்பட்டவருக்கு, ஊடகத்தினர் அதிகம் இங்கே இருப்பதால் புகார் கொடுக்க நேரடியாக வரவேண்டாம் என யாரோ தகவல் சொன்னதாக கூறப்படுகிறது .

சென்னையில் காவல் உதவி ஆணையாளர் ஒருவர் பெண் ஏட்டுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதே போன்றதொரு புகார் திருச்சியில் எழுந்திருப்பது தமிழக காவல்துறையில் நேர்மையுடன் பணியாற்றும் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.