டாஸ்மாக் விபரீதம்: ‘தண்ணி’ அடிக்க பணம் தர மறுத்த தாயைக் கொன்ற மகன்

தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் தண்ணி அடிப்பதற்கு பணம் கொடுக்க தாய் மறுத்ததால் அவரைக் கொன்று, காதில் இருந்த தோடை திருடிச் சென்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த சீகலஹள்ளியைச் சேர்ந்த வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி சின்னம்மாள்(85). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது காது அறுக்கப்பட்டு, காதில் கிடந்த தோடு மர்ம நபர்களால் திருடப் பட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்து விசாரித்து வந்த போலீஸாருக்கு, சின்னம்மாளின் மகன் ரங்கசாமி மீது சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தின் பேரில், காரிமங்கலம் போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். இதில், தனக்கு குடிக்க பணம் தர மறுத்ததால், தனது தாய் சின்னம்மாள் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது காதை அறுத்து, அரை பவுன் தோடை திருடிச் சென்றதாகக் கூறியுள்ளார். இதை அடுத்து ரங்கசாமியை போலீசார் கைது செய்தனர்.