ராமேஸ்வரம் – இலங்கை இடையே ரூ.24 ஆயிரம் கோடி செலவில் கடல் பாலம்: கட்கரி

புது தில்லி:

ரூ.24 ஆயிரம் கோடி செலவில், ராமேசுவரத்தையும், இலங்கையையும் இணைக்கும் வகையில் கடல் பாலம் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று ஓர் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், இந்த அரசு பதவி ஏற்றதில் இருந்து, பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. தெற்கு ஆசியாவுக்கும், தென்கிழக்கு ஆசியாவுக்கும் இடையே உறுதியான, நம்பகமான தொடர்புகளை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்தவகையில், ராமேசுவரத்தையும், இலங்கையையும் இணைக்க கடல் பாலம் அமைக்கப்படும். இதற்கு ரூ.24 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு முழுமையாக நிதி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி தயாராக உள்ளது.
இந்த திட்டம் குறித்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இதுபோல், வடகிழக்கு பிராந்தியத்தில் தடையற்ற பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக ‘வங்காளதேசம்–பூடான்–இந்தியா–நேபாளம் மோட்டார் வாகன ஒப்பந்தம்’ திம்புவில் கையெழுத்திடப்பட்டது.
இதையடுத்து, சரக்கு வாகன சோதனை ஓட்டம், கடந்த மாதம நடத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால், மேற்கண்ட 4 நாடுகளிடையே பயண தூரம் கணிசமாக குறையும். இந்த திட்டமும் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுடன் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், சார்க் மற்றும் ஆசியான் நாடுகளிடையே அனைத்து வகையான வாகனங்களும் தங்குதடையின்றி ஓட வேண்டும் என்ற கனவு நனவாகும். – என்று கூறப்பட்டுள்ளது.