சர்கார்- டீசர் வெளியீடு: ஆடி கார், நானோ கார், மாருதி கார், சர் கார்… என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்காக.. அந்த சர் காரில் என்ன சரக்கு இருக்கிறது என்பதைக் காடுவதற்காக ஜன்னலை சிறிது திறந்திருக்கிறார்கள் டீசரில்!
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் டீசர் வெளியாகியுள்ளது. இதில், விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஹ்மான் இசையில் தீபாவளிக்கு வெளியாகிறது படம்.
வெளிநாட்டில் கார்பரேட்டில் உயரதிகாரியாக வேலை பார்க்கும் விஜய், ஓட்டு போட இந்தியா வருகிறார். அவரது ஓட்டை யாரோ முன்னமேயே போட்டுவிட, அதனால் வெகுண்டெழுகிறார் விஜய்!
கள்ள ஓட்டு போடப் பட்டதைச் சொல்லி, தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் அரசியல் ஆட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி அரசியல்வாதிகளுக்கு ஆட்டம் காண்பிக்கிறார்! இதான் டீசரின் சுருக்கம்!
“அவன் ஒரு கார்பரேட் மான்ஸ்டர்… எந்த நாட்டுக்குப் போனாலும் தன்னை எதிர்க்கிறவங்களை அழிச்சிட்டுதான் வெளில போவான். அவன் இப்போ இண்டியா வந்திருக்கான்” என விஜய்யின் அறிமுகத்துக்கு வரலட்சுமி குரல் பின்னணியாக ஒலிக்கிறது.
” நான் எந்த கம்பெனியையும் விலைக்கு வாங்க வரல, இன்னிக்கு என்ன டே?! எலக்சன் நாள். நான் என்னோட ஒட்டு போடுறதுக்காக வந்திருக்கேன்..” என்று துவங்கும் விஜய் குரல், இன்னும் ஓரிரு நாளில் என்னவெல்லாம் நடக்க போகிறது என ஓரமாக நின்று வேடிக்கை பாரு, நான் கார்பரேட் கிரிமினல். உங்க ஊரு தலைவன தேடி பிடிங்க, இது தான் நம்ம சர்கார்” என விஜய் பேசும் டயலாக்குகள் இடம் பெற்றுள்ளன.
ஐயாம் அ கார்ப்பரேட் கிரிமினல் – என சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தின் டீசரை யுடியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.




