மாநிலங்களவையை சுமுகமாக நடத்த உடன்பாடு: அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு

புது தில்லி:
மாநிலங்களவையை சுமுகமாக நடத்த தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் மாநிலங்களவையை நடத்துவதில் இதுவரை நீடித்துவந்த முட்டுக்கட்டை விலகியுள்ளதாகக் கருதப் படுகிறது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நவ. 29 அன்று தொடங்கியது. கூட்டத் தொடர் துவங்கியது முதல், தாத்ரி சம்பவத்தை வைத்து, சகிப்பின்மை விவகாரத்தை கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து பிரச்னை எழுப்பின. இதனால் இரு அவைகளும் கூச்சல் குழப்பத்துடன் அலுவல் எதுவும் நடைபெறாமல் முடங்கிப் போயின.

இதனிடையே நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராக தில்லி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பிய விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கின. இதனால் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் தொடர்ந்தது.

இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசு ஏற்பாடு செய்தது. நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர், வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மாநிலங்களவையை சுமுகமாக நடத்தும் நோக்கிலும், முக்கிய மசோதாவை நிறைவேற்ற கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும் குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரி தலைமையில் தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவையை சுமுகமாக நடத்தவும், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்தன. முக்கியமாக, எஸ்சி/எஸ்டி (அடக்குமுறைகளில் இருந்து பாதுகாப்பு) திருத்த மசோதா, கடத்தலுக்கு எதிரான திருத்த மசோதா, அணுசக்தி திருத்த மசோதா, வர்த்தக நீதிமன்றங்கள் சிறப்புச் சட்ட மசோதா, சமரசத் தீர்வு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற ஒப்புக் கொள்ளப்பட்டது.