அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. மசோதாவில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை

புது தில்லி:

மாநிலங்களவையை சுமுகமாக நடத்த தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப் பட்டதாக குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறினார். மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்த போதும், ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறுவது இன்னும் தொங்கலில் தான் உள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருவது குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தன. இதனால் மிகவும் அர்த்தமுள்ள விவாதம் நடைபெற்றது. அவை சுமுகமாக நடத்த அனைவரும் இணைந்து முடிவெடுத்துள்ளோம். எனினும் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் மற்ற எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன’ என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், “இதற்கு முன்பு நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட விஷயம்தான் இங்கும் கூறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் புதிதாக ஒன்றும் விவாதிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஏற்கெனவே தீர்மானித்தபடி சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற கூட்டத்தில் சம்மதம் தெரிவித்தோம். ஜிஎஸ்டி குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. அதில் கருத்தொற்றுமை ஏற்படாது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதுவரை நாடாளுமன்ற அலுவல் நேரம் பாதிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் இனி வரும் நாள்களில் கூடுதலாக சில மணி நேரம் மாநிலங்களவையை நடத்த உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்’ என்றார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா தொடர்பாகக் கருத்தோற்றுமை ஏற்படவில்லை. எனினும் காங்கிரஸ் தவிர பிற எதிர்க்கட்சிகள் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் பாஜகவுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
ஜிஎஸ்டி மசோதாவில் காங்கிரஸ் கூறும் சில மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு மறுத்து வருவதால் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் அதனை நிறைவேற்றினால்தான் அடுத்த கட்டமாக அதனை மாநிலங்களின் ஒப்புதலுக்கு அனுப்பி, 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவர முடியும்.