டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், டெங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்.
ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்!
மேலும், காய்ச்சல் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அவர், “தினமும் சுமார் 20 பேர் வரை டெங்கு, பன்றிக்காய்ச்சலில் இருந்து குணமடைந்து வீடு திரும்புகின்றனர். பன்றிக்காய்ச்சலை தடுக்க மக்கள் கண்டிப்பாக கையை சுத்தமாக கழுவ வேண்டும்” என்றார்.
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியவை….
* இந்தியா முழுவதும் 8,025 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளது
* பன்றிக் காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் 625 பேரும், தமிழகத்தில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.
* காய்ச்சலால் ஒருவர் இறப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் டெங்குவை கட்டுப்படுத்த முடியும்!
* வதந்திகளைப் பரப்ப வேண்டாம்! சுகாதாரப்பணிகளை ஆட்சியர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
* உறுப்பு மாற்று சிகிச்சைகளில் வெளிநாட்டினர் மட்டுமே பயன் பெறுவதாக கூறுவது தவறு.
* வகையான மாற்று அறுவை சிகிச்சைகளில் 13 உறுப்புகள் இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன!
* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணியில் உள்ளது… – என்று கூறினார், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்.
இதனிடையே, டெங்கு கொசு உற்பத்தி மையங்களாக செயல்படும் ஆலைகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட ஆலைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டது. சிப்காட்டில் டைமலர் கனரக ஆலையின் கட்டுமான பிரிவில் ஆய்வு செய்த பின் ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தது திருப்பூர் மாநகராட்சி. அரசு போக்குவரத்து பணிமனை கிளை 1 , கிளை 2 க்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது திருப்பூர் மாநகராட்சி. டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதால் அபராதம் விதிக்கப் பட்டதாகக் கூறப்பட்டது.




