உயர் கல்வியை வணிக மயமாக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் அபாயம்! : கருணாநிதி வேதனை

சென்னை:

உயர்கல்வியை வணிக மயமாக்கும் பொது உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடும் அபாயம் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக அமைப்பு மாநாடு நைரோபியில் நடைபெற்று வருகிறது. இதில் சேவைத்துறையில் வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டால் உயர்கல்வி வணிக மயமாகிவிடும் என்று கல்வித்துறை நிபுணர்களின் கவலையை கருணாநிதி அறிக்கையில் தெரிவித்து, தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக வர்த்தக அமைப்பு (WTO) உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பத்தாவது வர்த்தக அமைச்சர்களின் பத்தாவது மாநாடு கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில், இந்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், சேவைத் துறை யில் வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கையில், இந்தியா தற்போது கையொப்பமிடும் அபாயம் உள்ளது. அப்படி அந்த ஆபத்து ஒப்பந்த வடிவம் பெறுமானால், இனிமேல் உயர் கல்வி வணிகமயமாகி விடும்; கல்வியின் அடிப்படை நோக்கமே நொறுங்கிச் சின்னாபின்னமாகி விடும் என்று நமது கல்வியாளர்கள் கருது கிறார்கள். இந்திய உயர் கல்வியில் வெளிநாடுகளின் மேலாதிக்கம் அதிகரிக்கும். ஜனநாயக ரீதியில் செயல் படும் உயர் கல்வி அமைப்பின் அடித்தளம் வலுவிழக்கும்.

கல்விச் சேவையை வணிக மயமாக்கும் முயற்சி, 160 நாடுகள் உறுப்பினர் களாக உள்ள உலக வர்த்தக அமைப்பின் தோகா மாநாட்டில் 2001ஆம் ஆண்டு தொடங்கியது. 2005இல் உயர் கல்வியில், உலக வர்த்தக அமைப்புக்கு சந்தை வாய்ப்பை வழங்கும் ஒப்புதலை, உறுப்பு நாடான இந்தியாவும் ஆமோதித்தது. ஆனால் இதற்கான பேச்சுவார்த்தை முடிவடையவில்லை.

இந்தியக் கல்வித் துறையில், இப்போதே தனியாரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் உயர் கல்வியில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களையும் அனுமதித்தால், கல்வி, சேவை என்பது மாறி, சந்தைப் பொருள்களில் ஒன்று என்றாகி விடும். உலக வர்த்தக அமைப்பின் 160 நாடுகளும் இந்தியக் கல்வித் துறையில் நுழைந்து வர்த்தகம் செய்ய அனுமதி கிடைத்து விடும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு கல்விவணிகம் செய்ய வரும் போது அவர்களின் பாடத் திட்டங்கள், ஆசிரியர்களின் தரம் போன்றவற்றை ஒழுங்கு படுத்த இங்குள்ள கல்வி அமைப்புகளால் இயலாது. எப்படியென்றால், பல்கலைக் கழக மானியக் குழு, தொழில் நுட்பக் கல்விக் குழு, மருத்துவக் கவுன்சில் போன்ற அமைப்புகளைக் கலைத்து விட்டு, அவற்றுக்குப் பதிலாக பிற சேவை களில் ஏற்கனவே இருப்பதைப் போன்ற தற்சார்பு ஒழுங்கு முறை ஆணையங்கள் அமைக்கப்பட்டு விடும். அவை, தற்சார்புத் தன்மை கொண்டதாகவும், வெளி நாட்டு மூலதனத்துக்கு சாதகமாகவும் இருக்கும். மேலும் இட ஒதுக்கீடு, கல்வி உதவி, இந்திய மொழிகள் ஆகியவற்றுக்கும் பாதகம் ஏற்படுத்தும். மேலும் சிறுபான்மை நிறுவனங்களுக்கான மானியங்கள் போன்றவை கூட கேள்விக்குறியாகும்.

இந்திய நாட்டின் சட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு கல்வி வியாபாரத்தில் முதலீடு செய்யும் இந்திய மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் நலன் காக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படும். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய நீதி மன்றங்கள் எந்தக் கல்வி நிறுவனத்தின் மீதான வழக்கையும் விசாரிக்க இயலாது. ஐந்தாண்டிற்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று, ஆட்சி மாறினால் கூட, ஒப்பந்தத்தைத் தற்போது ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுவிட்டால் பின்னர் அதைத் திரும்பப் பெற இயலாது.

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் இ. பாலகுருசாமி இது பற்றிக் கூறும்போது, அன்னிய கல்வி நிறுவனங்களை அனுமதித்தால், இந்தியாவில் கல்விக் கட்டணம் உயரும். இங்கே குறைந்த எண்ணிக்கையில் உள்ள தரமான ஆசிரியர்களையும், கூடுதல் ஊதியம் தருவதாகக் கூறி, அன்னிய கல்வி நிறுவனங்கள் அழைத்துச் சென்று விடுவார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் பேராசிரியர்கள் பலர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால் எப்படிப்பட்ட பேராபத்துகள் வரக் கூடுமென்று கருத்து தெரிவித் திருக்கிறார்கள்.

கல்வியை முழுமையாகக் கடைச்சரக்காக மாற்றும் “காட்ஸ்” ஒப்பந்தத்தில் மத்திய பா.ஜ.க. அரசு கையெழுத்திடக் கூடாதெனக் கோரி பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தும், இந்திய அரசு அதனைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. புதிய கல்விக் கொள்கை காரணமாக கல்வி கற்பதற்காக வழங்கப்பட்டு வந்த உதவித் தொகைகள் ரத்து செய்யப்படுவதுடன், இட ஒதுக்கீடும் ரத்து செய்யப்படும். கல்வியில்சிறந்தவர்கள் என்று ஒரு சதவிகிதமும், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு ஒரு சதவிகிதமும் மட்டுமே உதவித் தொகை பெறலாம் என்று ஒப்பந்தம் கூறுகிறது. இத்தனை ஆபத்துகளைக் கொண்ட ஒப்பந்தத்தில் தங்கள் நாடுகள் கையெழுத்திடக் கூடாது என்று ஆப்பிரிக்க, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆசிரியர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாதென்று இந்தியா முழுதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் இதைப் பற்றி மாணவர்கள் சார்பில் தெரிவித்திருக்கின்றனர்.

நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திடுவது நாடாளு மன்றத்தையும் ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயலாகும். முறைப்படி நாடாளுமன்றத்தில் இதுபற்றிய பிரச்சினை கொண்டு வராவிட்டாலுங்கூட, தி.மு. கழகத்தின் சார்பில் தம்பி திருச்சி சிவா நேற்றையதினம் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாதென வலியுறுத்திப் பேசியிருக்கிறார். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து போராடி நிலைநாட்டிய சமூக நீதி அடிப்படையிலான அனைத்துச் சட்டங்களும் அவற்றின் பலன்களும் இனி இல்லாமலே போய் விடும்.

இத்தனை பேராபத்துகள் நிறைந்த, இந்திய சமுதாய விரோத ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது. மத்திய பா.ஜ.க. அரசு, உடனடியாக இந்த ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று தி.மு. கழகத்தின் சார்பில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

என்று கருணாநிதி இந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.