
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால் அதிமுக கொறடா இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 18 பேரின் தகுதி நீக்கத்தை உறுதி செய்தது.
இதை அடுத்து, 18 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். மேல்முறையீடு குறித்து 18 பேரிடமும் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக கொறடா ராஜேந்திரன் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தகுதி நீக்கம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 18 பேர் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.



