பீப் பாடல் மற்றும் இளையராஜா குறித்த விமர்சனம்: ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

சிம்பு பாடிய பாடல் ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச வார்த்தைகளுடன் இருந்ததால், கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது.

பீப் பாடல் குறித்து இளையராஜாவிடம் ஒரு நிருபர் கேள்வி எழுப்பியபோது அவர் மிகவும் கோபமடைந்து நிருபரைச் சாடினார். இதனால் இளையராஜா பேசியது சரியா என்கிற ரீதியில் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இளையராஜா, நிருபரைக் கண்டித்தது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும் என்று ட்வீட் செய்தார்.

இதற்கு இளையராஜாவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அந்த ட்வீட்டைப் பிறகு நீக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.

இப்போது தனது வலைத்தளத்தில், இளையராஜாவை விமரிசனம் செய்தது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இளையராஜாவிடம் விவேகமில்லாத நிருபர் ஒருவர், பீப் பாடல் குறித்து கேட்கிறார். முதிர்ச்சியில்லாத விதத்தில் நிருபர் கேள்வி கேட்டார் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், இளையராஜா இச்சம்பவத்தை இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம். (அரைவேக்காட்டுத்தனமான சில நிருபர்களின் அதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பொறுமையுடன் இருப்பது எவ்வளவு கடினம் என்பதும் எனக்குத் தெரியும்.)

எனக்கு நிறைய கோபமான கடிதங்கள் வரலாம். அதற்காக நான் எண்ணியதைப் பகிராமல் இருக்கமுடியாது. இளையராஜாவின் இசையின் ரசிகன் நான். அதற்காக நான் ஒப்புக்கொள்ள முடியாத நடவடிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. நான் அவருடைய ரசிகன். வெறியன் அல்ல.

30 துறைகளைச் சார்ந்த சினிமாவை அதைப் பற்றிய அறிவு இல்லாமல் ஒருவர் விமரிசனம் செய்ய முடிகிறபோது, பொது இடத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்து கூறமுடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.