கஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு : காவல் ஆய்வாளர் தாற்காலிக பணி நீக்கம்

 
 
கஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மண்டபம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் தனபாலனை தாற்காலிக பணி நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.ஆனந்தகுமார் சோமானி உத்தரவிட்டார்.
 
ராமநாதபுரம் அருகே பட்டினம்காத்தான் சோதனைச் சாவடியில் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசலிங்க பாண்டியன் தலைமையிலான போலீஸார் கடந்த 11 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 
அப்போது ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு சென்ற காரில் 5 கிலோ கஞ்சாவைக் கடத்தியதாக ராமேசுவரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்வக்குமாரை(32)க் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா,7 கைப்பேசிகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
 
செல்வக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செல்வகுமார் கடத்தலில் ஈடுபடவும், காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்கவும் காவல்துறையினரே துணை போனது தெரியவந்தது. இதையடுத்து செல்வகுமாரின் கைபேசியினை ஆய்வு செய்தபோது அதில் மண்டபம் காவல் நிலைய ஆய்வாளர் தனபாலனுடன் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. மேலும், வழக்குகளில் இருந்து விடுவிக்க ஆய்வாளர் தனபாலன் பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.ஆய்வாளரான தனபாலனுக்கும் கஞ்சா கடத்தும் தொழிலில் தொடர்பு இருப்பதாக செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
 
காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருந்த ஆய்வாளர் தனபாலன் குறித்த தகவல்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஆய்வாளர் தனபாலனை பணியிடை நீக்கம் செய்ய டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) அனந்தகுமார் சோமானி, தனபாலனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 
கஞ்சா கடத்தலில் தொடர்புடையதாக செல்வக்குமார் தெரிவித்த மேலும் சிலரிடமும் காவல்துறையினர் ரகசிய விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
 
மேலும், கடத்தல் பேர்வழி செல்வகுமாருடன் தொடர்பு வைத்திருந்த இன்னும் சில போலீஸார் மற்றும் காவல்துறையில் பணியாற்றும் க்யூ பிரிவு போலீஸார் பற்றிய தகவல்களும் தெரியவந்திருப்பதாக தெரிகிறது. அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
 
நடைபெற்ற சம்பவத்தால் ராமநாதபுரம் மாநகர காவல் வாட்டாரத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.