ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின் போது காவல் துறையினர் நடத்திய கூத்து !

 
 
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நேற்று நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின் போது காவல் துறையினர் பக்தர்களுக்கு கொடுத்த இடையூறுகள் பற்றிய ஸ்ரீரங்கம் ரெங்கநாத பெருமாளின் தீவர பக்தரின் குமுறல் பதிவு:-
 
இந்த வருட வைகுண்ட ஏகாதசி தரிசனம்…
மேலும் சில அனுபவங்களைத் தந்தது.
 
முன்பெல்லாம்…. நள்ளிரவு நேரத்தில் ஆலயத்தின் உள்ளே செல்வோம். அமர்ந்து கொள்வோம். அதிகாலை பெருமாள் எழுந்தருளச் செய்யும் போது… சற்று அனுபவித்து… பரமபத வாசல் திறந்த பின்னர் காத்திருந்து… பின்னர் வெளிவருவோம். ஆயிரங்கால் மண்டபத்தில் பெருமாள் வீற்றிருப்பார். தரிசிப்போம்… நம்பெருமாள் திருமேனி அழகை அனுபவித்தபடி! திருப்பவள செவ்வாயின் இரு புறமும் பள்ளம் விழ, பெருமாள் உதடு குவித்து சிரிப்பது போலே வாவென்று அழைப்பார். பேசும் பெருமாள்தான்!
 
எதிரே மற்றும் அடுத்து உள்ள மணல் வெளியில் பக்தர்கள் இரவு நேரத்தில் ஆற அமர ஓய்வு எடுத்து பின்னர் செல்வார்கள். எல்லாம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் அரங்கனின் அசையாத பக்தர் குழாங்கள். இப்போது அந்த அப்பாவி முகங்களை அதிகம் பார்க்க முடியவில்லை! பேசும் பெருமாள் முன்னும் சற்றும் நிற்க முடிவதில்லை!
 
வைகையில் இருந்து இறங்கி, ஞாயிறு நேற்று மாலை திருவரங்க நகருக்குள் நுழையும்போதே… போலீஸ் கெடுபிடி இருப்பதை உணர்ந்தேன்! நண்பர் விஜயராகவன் கிருஷ்ணனை அழைத்தேன். தெற்கு கோபுரம் வந்து வண்டியில் அழைத்துச் சென்றார். பஜ்ஜி காபி உபசாரம் வேறு! பேசிக் கொண்டிருந்துவிட்டு, இருவரும் அரங்கன் ஆலயத்துக்குள் சென்றோம். வெளியில் இருந்த கெடுபிடியும் கூட்டமும் உள்ளே இல்லை என்பதை உணர வெகு நேரம் பிடிக்கவில்லை! மோஹினி அலங்கார தரிசனத்தை கண்குளிரக் கண்டு, ஆசார்ய சுவாமிகளுக்கு பரிவட்டம், மாலை சாற்றியும், ஆழ்வார்களுக்கு அரங்கன் கொடுக்கும் மரியாதையும் கண்டு திருப்தியுற்றவனாய் வெளியில் வந்தேன்.
 
உள்ளே கூட்டம்… பயங்கர கூட்டம்… போகாதீங்க! இருங்க ! காலைல வாங்க! இப்போ ரூ. 3 ஆயிரம் டிக்கெட் வாங்கினவங்க மட்டுமே உள்ளே போலாம்.. இலவச தரிசனம்லாம் காலை 6 மணிக்கு மேல்தான். கோயிலில் கூட்டம் நிறைஞ்சாச்சு… இனிமே உள்ளே போக வழியில்லை என்றெல்லாம் போலீஸார் சொல்லிக் கொண்டும், மக்களை உள்ளேயே விடாமல் செய்து கொண்டும் இருந்தார்கள்.
 
இத்தனைக்கும் கோயில் பாதுகாப்பில் 4 ஆயிரம் போலீஸார். கோயிலுக்கு உள்ளேயே 2,500க்கும் மேற்பட்ட போலீஸார். ஆனால், உள்ளே பக்தர் கூட்டமே வழக்கமான கூட்டத்தில் 3ல் 2 பங்குதான்! ஏன் இவ்வளவு போலீசார் என்று விசாரித்தால்… ஏதோ வெடி குண்டு மிரட்டலாம்… 3 ஆயிரம் பேர் பாதுகாப்புக்கு என்று அனுமதித்து, மிரட்டல் காரணத்தால் கூடுதலாக ஆயிரம் பேர் பாதுகாப்புக்கு அமர்த்தப் பட்டார்களாம்…
எங்கு நோக்கினும் காக்கிச் சட்டைகளே தெரிந்தார்கள் – கோயில் என்பதால் இருக்க்க வேண்டிய காவித் துண்டுகளுக்கு பதிலாக! ‘
 
உள்ளூர் மக்கள் பெரும்பாலும் கோயிலுக்கு உள்ளே செல்வதைத் தவிர்த்து விட்டிருக்கிறார்கள். நாங்கள் நாளை அல்லது ராப்பத்து நாளில் போய் பார்த்துக் கொள்கிறோம் என்று ஒதுங்கியிருந்தார்கள். நண்பர்கள் ஓரிருவரை உடன் அழைத்தேன். மறுதலித்தார்கள். சரி என்று, இரவு தங்கிக் கொள்ள சிற்றப்பா வீட்டுக்குச் சென்றுவிட்டேன்!
 
காலை 6 மணிக்கு மேல்தான் பரமபத வாசல் செல்லும் இலவச தரிசன வரிசை அனுமதிக்கப்படும் என்று முந்திய தின இரவே போலீசாரால் சொல்லப்பட்டு விட்டதால், வழக்கமாக நாங்கள் செல்லும் வடக்கு வாசல் வழியாக நுழைந்தோம். தாயார் சந்நிதி முன்னுள்ள வடக்கு வாசல் பிரதான நுழைவுப் பகுதியில் கம்புகள் கட்டப்பட்டு, வழி அடைக்கப்பட்டிருந்தது. காவலர்கள் அதிகம் தென்பட்டார்கள். காலை சுமார் 7.30 அளவில் அங்கே திரண்டிருந்த பக்தர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் தற்போது டி.எஸ்.பியாகப் பொறுப்பேற்றிருக்கும் திருவாளர் கந்தசாமி.
 
சரி… வழக்கமான வாக்குவாதம்தானே! என்று கவனித்துக் கொண்டிருந்தேன். உள்ளூர் மாமிகள், வயதானவர்கள், பெரியவர்கள் என … அங்கே கூடியிருந்தார்கள். எல்லோரையும் ரங்கா ரங்கா வாசல் வழியாகத்தான் விடுவோம். நீங்கள் அங்கே செல்லுங்கள் என்று அதட்டிக் கொண்டிருந்தார் திருவாளர் கந்தசாமி. ஆனால் அவர்களோ… ஐயா.. வழக்கமாக நாங்கள் செல்லும் வழி இது. நாங்கள் பெருமாள் முத்தங்கி சேவைக்கு செல்லவில்லை. ஆயிரங்கால் மண்டபத்துக்குப் போக வேண்டும். உற்ஸவரை ஸேவிக்க… இதற்காக நாங்கள் அந்த வாசலுக்குச் சென்று எப்படி திரும்பவும் இதே இடத்துக்கு வர முடியும் என்று கேட்டார்கள். கத்திக் கொண்டிருந்த கந்தசாமி, நீங்கள்லாம் மனுசங்கதானா? சொன்னா புரியாதா? உள்ளே கூட்டம் அதிகம் இருக்கு. எல்லாரையும் வெளியேத்திட்டுதான் உங்களை எல்லாம் விட முடியும் என்று பதில் அளித்தார். தொடர்ந்து … மனுசங்களா இருந்தா மண்டைல ஏறும் என்றார்…கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மண்டையில் ஜிவ் என்று ஏறியது!
 
பொதுவாக நான் போலீஸ்காரர்களை விரோதிகளாகப் பார்ப்பதில்லை. காவல்துறையினருக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணுபவன். ஆனால்… அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களை இப்படி ஆலயப் பணிக்கு அனுப்பி வைத்தால்.. இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று எண்ணும் படியாய்… மோசமான அணுகுமுறைகள்.
 
என் செல்போனில் இதை க்ளிக்கினேன். ஐயா டிஎஸ்பீயார் பார்த்துவிட்டார். ஓடி வந்து, என்ன வீடியோவா புடிக்கிற என்று செல்போனை பறித்துக் கொண்டார். எப்போதுமே என் அடையாளத்தை எங்கேயும் நான் சொல்லிக் கொள்வதோ, PRESS அடையாள அட்டையைக் காட்டுவதோ இல்லை.
 
அதன் மூலமான சலுகையை எங்கும் எதிர்பார்ப்பதுமில்லை. ஆனால்… இப்போது இந்தக் கட்டாயச் சூழல் ஏற்பட்டதால், அடையாள அட்டையைக் காட்டினேன். அடுத்த நொடி செல்போனை கையில் கொடுத்தார். சார் உங்களால் முடிஞ்சத பாத்துக்குங்க என்றார். சிஎம் செல்லுக்கு வேணா அனுப்பறேன் என்று நான் புன்னகைத்தேன். அடுத்து அமைதியாக அவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார். சற்று நேரம் ஆனது. மக்களின் நெருக்கடியே வென்றது. அதே வழியில் அடைக்கப்பட்டிருந்த கட்டைகளை எடுத்து ஓரிருவராக வரிசையில் வரச் சொல்லி உள்ளே விட்டனர்.
 
நானும் வரிசையில் நின்று கொண்டேன். ஒரு கிறிஸ்துவ போலீஸ்கார அம்மணி, வயதான மாமிகளை விரட்டி, வரிசை வரிசை என்று கத்தினார். கூடவே, இப்படியே போங்க.. பெருமாள் கூட்டுட்டுப் போவார் என்று இளக்காரமாகப் பேசினார். என்னைப் பார்க்காததுபோல் முகத்தை திருப்பிக் கொண்டு… ஒழுங்கா சொன்னா கேக்க மாட்டீங்க.. சொன்னா வீடியோ எடுத்துக்கிட்டு வம்பு பண்ணுவீங்க..
போங்க போங்க போய்ச் சேருங்க என்றார்.
 
 
ஆமாம்…
இதே மனநிலையில்தான்…
மாண்புமிகு அம்மாவின் ஆணைக்கிணங்க
செயல்படும் டிஎஸ்பி கந்தசாமியின் பேச்சை
வாட்ஸ் அப்பில் போட்டுவிட்டேன்….
ஸ்ரீரங்கத்தில் உள்ளோர் போலீஸ் அராஜகம் ஒழிக என்றார்கள்!
 
நானோ … ஆலயங்களை விட்டு அரசை விரட்டுவோம் என்று சொல்லிக் கொண்டேன்.
 
சென்னை மட்டுமில்ல… தமிழ்நாட்ல பல பகுதிகள்ல மழை வெள்ளம் வந்து, இவ்ளோ சேதம் ஏன் தெரியுமா?
என்ன சொல்ல வர்றீங்க…?
 
இங்கே கும்பாபிஷேகம் பண்ணாங்கள்ல…! அது ரொம்ப தப்பும் தவறுமா நடந்துச்சு. ஆகம விரோதம்தான். தட்சிணாயனத்துல வேணாம்னோம். கேக்கல. உத்தராயண துவங்கி, பங்குனில செஞ்சிருக்கலாம். ஆனா, இவங்க வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு காசு பாக்கணும்கிற ஒரே குறிக்கோள்ல முன்னாடியே மூலவர் கும்பாபிஷேகம் செஞ்சிட்டாங்க. இதனால், ஆட்சி செய்பவருக்கு பாதகம்னு எவ்வளவோ சொன்னோம்… அதான் பாருங்க, முதலமைச்சருக்கு எவ்ளோ அவப் பெயர் வந்து…. அடுத்து பாருங்க… ஆட்சில தொடர முடியாது …
 
நம்ம கோயிலுக்கு வரக்கூடாதுன்னே முடிவு கட்டி இயங்கறானுங்க… போலீஸ்காரங்க இத்தன பேரு தேவையா? எல்லாம் ஒரு பக்கம் எங்கயோ உக்காந்துகிட்டு… டூட்டி பாக்கறாங்களாம். இவங்கதான் அதிகமா கோயிலை அடைச்சிருக்கிறது…!
 
எத்தன பேரு இங்க லால்குடி, நத்தம், வாளாடி, துறையூர்ன்னு வருவாங்க! இப்ப பாருங்க அவங்கள எல்லாம் கோயில்ல அதிகம் பாக்க முடியல… இப்ப மூணு வருசமா… எல்லாரும் ஸ்ரீரங்கம் கோயில்ல இந்த மூணு நாள் நமக்கு இல்லன்னு முடிவு பண்ணிட்டாங்க. மூணு நாளும் போலீஸ்காரங்கதான் கன்ட்ரோல்னு தெரிஞ்சிக்கிட்டு சுத்திமுத்தி இருக்கற திவ்ய தேச கோயில்களுக்கு போயிடறாங்க…. காசு உள்ளவன் மட்டும் இங்க ராத்திரி உள்ள பூந்துக்கிறான்…
 
இப்படித்தாங்க… நேத்து ராத்திரி சுத்துப்பட்டு சனங்க எல்லாம் வந்தாங்க. அவங்கள ராத்திரி 11 மணி வரை நிக்க வெச்சி, கோயில்ல இனி நீங்க போக முடியாது… எல்லாம் ஃபுல். அப்டின்னு அனுப்பிட்டாங்க. ஆனா வழக்கமா காலங்காலமா அவங்கல்லாம்… அந்த மணல் வெளில தங்கியிருந்து, மத்யானம் போய் பரமபத வாசலையும் ரங்கநாதரையும் சேவிச்சுட்டு வருவாங்க… திடீர்னு 11 மணிக்கு மேல பாவம்… அவங்க என்ன செய்வாங்க? தங்குறதுக்கு இடமும் இல்லை. எங்கயும் ரூம், சத்திரம் எதுவும் இல்ல… இதுனாலயே பயங்கர கூட்டம்.. ரங்கா ரங்கா கோபுர வாசல்ல….
 
யாராயிருந்தா என்ன? எவரையும் விட முடியாது….ங்கிறான் அவன். ரெண்டு வருசம் முன்னே ஒரு கூத்து நடந்தது தெரியுமா? அப்போ கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் இருந்தாங்க. அவங்க வழக்கமா வர்ற மாதிரி சுடிதார்ல, வீட்டுக்காரர் புள்ளைங்கள கூட்டிட்டு வந்திருந்தாங்க. இங்க இருந்த ஒரு டிஎஸ்பி, அவங்களை ஓரமா நிக்கவெச்சிட்டார். அவங்க.. ஐயா நான் கலெக்டருங்க.. அப்டின்னார். எந்த மாவட்ட கலெக்டருங்க..? யாராயிருந்தா என்ன என்று பேசியிருக்கிறார். பின்னர் பின்னால் எங்கோ கூட்டத்தில் வந்து கொண்டிருந்த உதவியாளர் வந்து, சார் இவங்கதான் திருச்சி கலெக்டர் என்று சொன்ன பின்னர், ஸாரி கேட்டு ஒதுங்கியிருக்கிறார் அந்த வேற்று மாவட்ட டிஎஸ்பி.
 
அட நீங்க வேறங்க..இங்க ஜேஸியவும் நிக்க வெச்சாங்க… போன வருசம்!
இப்படியாக பேச்சு காதில் விழுந்தது. இடம் : திருவரங்கம் கோயில் ஆயிரங்கால் மண்டபம் போற வழியில் வரிசையில் நின்னபோது… பக்தர்கள் கிட்டேயிருந்து!
 
கருட மண்டபத்தில் பெருமானை மோஹினி அலங்காரத்தில் சேவித்ததிலும் சரி… இன்றைய தின ஆயிரங்கால் மண்டப தரிசனத்திலும் சரி… மிக மிக திருப்தியுடன் இருந்தது பெருமாளின் திவ்ய ஸேவை. உள்ளே கூட்டம் இல்லை. வெறிச்சோடி இருந்தது பல இடங்கள். பரமபத வாசல், தாயார் சந்நிதி, ஆயிரங்கால் மண்டபம் எல்லாவற்றிலு விரைவில் சென்று தரிசிக்க முடிந்தது. பெருமாளின் முத்தங்கி சேவையை தவற விட்டாயிற்று. கொடிமரத்தின் அருகிலேயே மக்களை நிறுத்தி வரிசை கட்டி, டிக்கெட்டுக்கு விட்டிருந்தார்கள்.
 
இவ்வளவு விரைந்து ஸேவிக்க வழி ஏற்படுத்திய காவல் துறையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! பாராட்டோ பாராட்டு அவ்ளோ பாராட்டு!!
 
கோயிலுக்கு வெளியிலேயே மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
 
செயின் பத்திரம், செல்போன் பத்திரம், கழுத்தில் கவனம் இருக்கட்டும். உங்கள் அருகிலேயே டிப் டாப் ஆசாமிகள் இருப்பர். அவர்கள் திருடனாகவோ திருடியாகவோ இருக்கலாம். பொருள் போன பிறகு அழுது பிரயோசனமில்லை. உள்ளே கூட்டம் அதிகம் உள்ளது. சொர்க்க வாசலுக்கு செல்பவர்கள் ரங்கா ரங்கா கோபுரம் வழியாக செல்லவும்.
 
ராமானுஜர் சந்நிதி வழியை அடைத்து விடுங்கள். அங்கே பாதுகாப்புக்கு நிற்கும் காவல்துறையினர் கவனத்துக்கு.
 
– இப்படியாக ஓடிக் கொண்டிருந்தது அறிவிப்புகள்.
 
இதைக் கேட்ட உள்ளூர் அன்பர்கள் பெரும்பாலும் இந்த முறை ஓரங்கட்டி விட்டார்கள்.
 
காவல் துறை பாதுகாப்பு வேண்டும் தான்! ஆனால் இந்த அளவுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலானவர்கள் ஏதோ நிற்க வேண்டுமே என்று நின்று கொண்டிருந்தார்கள். பலர் செல்லில் ஜொள்ளிக் கொண்டிருந்தார்கள். பெண் காவலர்கள் சிலர் சாவஹாசமாக கால் நீட்டி அமர்ந்து, கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
இத்தனை இருந்தும், தங்கள் தலையிலேயே அடித்துக் கொண்டு, பக்த ஜனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டபடி, இதெல்லாம் தேவையில்ல சார் என்று கூறிய படியே புன் சிரிப்புடன் மக்களை நகர்த்திக் கொண்டிருந்த ஓரிரு காவலர்களையும் காண முடிந்தது. அதிகாரிகளின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டபடியும் கட்டுப் படாத மனநிலையிலும் சிலர்….
 
உண்மையில், இத்தனை களேபரங்கள் தேவையில்லைதான்! கம்பு கட்டி விட்டிருக்கிறார்கள். வரிசையை ஒழுங்காக அமைத்து, தெற்கு, கிழக்கு, வடக்கு மூன்று வாசல்களிலும் மக்களை அனுமதித்து, அழகாக கூட்ட மேலாண்மையை அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கலாம்.
 
பரமபத வாசலா – வடக்கு வாசல்+ தெற்கு வாசல் வழி. பெருமாள் சேவையா – தெற்கு வாசல் + வடக்கு வாசல் வழி! ஆயிரங்கால் மண்டபமா – கிழக்கு கோபுர வழி… உள்ளே நுழைந்ததும், வரிசையை இரண்டாகப் பிரித்து, பரமபத வாசல் தனி, பெருமாள் சந்நிதி தரிசன வழி தனி என்று … இத்தனை நாட்கள் இருந்த நல்ல ஏற்பாடுதான்! ஆனால் இப்போது ஓரிரு வருடங்களாக மாற்றம் ஏனோ?
 
எல்லாருமே தெற்கு வாசல் வழியே மட்டுமே வர வேண்டும் என்று, ஒட்டு மொத்தமாக அனுப்பி, வரிசையை வடக்கு உத்தர வீதி வரை கொண்டு சென்று…
 
ஏன் இப்படி? என்ன சாதித்தார்கள் போலீஸார்?
 
இவர்களின் செயலால் கோயிலில் கூட்டம் அதிகம் என்ற கற்பனை வெளியில் பகிரப்பட்டது. ஆனால், உள்ளே எப்படி இருந்தது என்பதற்கு சில போட்டோக்களை பகிர்கிறேன்.
 
ஆக… எனக்குள் எழும் சந்தேகம் நிவர்த்தியாக வேண்டுமானால்… – யார் அந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது என்பதை காவல் துறை உடனே கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.
 
கூட்டம் கூட்டம் என்று பூச்சாண்டி காட்டி… உள்ளே விட மறுத்து… இவர்கள் துரோகம் செய்தது – திருச்சி நகரைச் சுற்றியுள்ள சுத்துப்பட்டு கிராமத்து ஜனங்களைத்தான்!
 
அவர்கள் தான் உண்மையில் அரங்கனின் மேல் உயிரையே விடுபவர்கள். எத்தனை ஆசையுடன் பஜனை, ராம நாமம், ரங்க ரங்கா கோஷம் என அவர்கள் அந்த மணல் வெளியில் பொழுதைக் கழிப்பார்கள்??? அரங்கனை விட அந்த அடியார்களின் பக்தியைக் காண்பதில்தான் என்ன வோர் ஆனந்தம் இருந்தது.
 
ஆனால்… எல்லாம் பாழ் ! பாவம், அவர்கள் இரவு 11 மணிக்கு துரத்தியடிக்கப்பட்டார்கள். காசு உள்ளவன் மூவாயிரத்தையும் கூடவே எதையும் கொடுத்து தன் டாம்பீகத்தை வெளிப்படுத்தி, நானும் பெருமாளை ஸேவித்தேன் தெரியுமோ? மூவாயிரம் ரூபா டிக்கெட்டாக்கும்… என்று பீற்றிக் கொள்வான். ஆனால் அந்தப் பரிசனங்கள்…?
 
தரிசனம் இன்றி தவித்துப் போனார்கள். !
 
எங்கு நோக்கினும், காகிகள்… உள்ளே வந்த வண்டிகள் அதிமுக கொடி கட்டிய பாஸ் வைத்த வண்டீகள், மற்றும் அத்தனை காவலர்களுக்கும் உணவுப் பொட்டலங்களை சுமந்து வந்த காவல் வண்டிகள். கோயில் உள்ளே பிரசாதங்கள் என்ற பெயரில் தேவஸ்தான கடைகளில் விற்கப்படும் புளியோதரை, பொங்கல், தயிர்சாதம், தோசை, தேங்குழல் வகையறாக்கள் மட்டுமே இருக்க்கும். ஆனால் இப்போதோ மண்டபங்களில் போலீஸ்காரர்கள் சாம்பார் பொட்டலங்களையும் சட்னி பொட்டலங்களையும் பிரித்து அங்கங்கே கொட்டிக் கொண்டிருந்தார்கள்…
 
காவல் துறை அதிகாரிகளுக்கு ஸ்ரீரங்க நகர்வாசிகள் போல் நானும் சொல்லிக் கொள்வது இதுதான்…! Crowd Management முறையாகக் கையாளுங்கள். இது அரசியல் கூட்டம் அல்ல. பக்தர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதே!
Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.