கனமழை குறித்து எச்சரித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்

புது தில்லி:

சென்னையில் கனமழை பெய்யும் என்பது குறித்து 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தோம்; ஆனால் மாநில அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்.
மேலும், சென்னையில் ஏற்பட்ட அந்த அளவு பெரும் பாதிப்புக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் பெருமளவு நீர் திறக்கப்பட்டு அடையாறில் வெள்ளம் ஏற்பட்டதும் காரணம் என தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்ற மாநிலக்களவையில் வறட்சி, இயற்கை பேரிடர் குறித்த விவாதம் நடைபெற்றபோது, காங்.எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், சென்னையில் வெள்ள பாதிப்பின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவாக வெள்ள காலங்களில் விடுக்கப்படுகிற மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள் என்ற எச்சரிக்கையைக் கூட மாநில அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் பேரிடர் மேலாண்மையின் தோல்வியால் 400 உயிர்கள் வரை பலியாகியுள்ளன. தற்போது ஏதோ ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைப் போல மத்திய அரசு தவணை முறையில் நிதி உதவி வழங்குகிறது; இயற்கைப் பேரிடரை சமாளிக்க தமிழக அரசிடமும் எந்த ஒரு திட்டமுமே இல்லை என்றார்.
சி.பி.எம். எம்.பி ரங்கராஜன், செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

விவாதங்களுக்குப் பதிலளித்த மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்,
அக்டோபர்- டிசம்பர் மாத காலம்தான் தமிழகம், புதுச்சேரிக்கு அதிக மழை கிடைக்கும். வழக்கமான மழை அளவை விட 115% கூடுதலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. சென்னை பேரழிவுக்கும் குளோபல் வார்மிங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. குடியிருப்புகள் முறையான திட்டமிடலுடன் கட்டப்படவில்லை. இயற்கையான நீர்வழித் தடங்கள், ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டதும் சென்னை பாதிக்கப்பட ஒரு காரணம்.
சென்னையில் கனமழை பெய்யும்; அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசை மத்திய அரசு எச்சரித்தது. இவ்வாறு பிரகாஷ் ஜாவ்டேகர் கூறினார். மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை எடுக்கப்படவில்லை; செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு நீர் திறப்பால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்.

தமிழகத்தில் ஏற்பட்ட கனமழைக்கு பருவ நிலை மாறுபாடு காரணமா, இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்று திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பிரகாஷ் ஜாவ்டேகர் அளித்த விளக்கம்…

இந்திய வானிலையின் இயற்கையான மாற்றங்கள் காரணமாகவே தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த 40 முதல் 50 ஆண்டுகளில் நாட்டில் மழைப்பொழிவு அதிகரித்திருப்பதாக சில ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இந்தியாவில் பெய்யும் கனமழைக்கும் சர்வதேச பருவநிலை மாற்றத்துக்கும் ஒரு சிறிதும் தொடர்பில்லை. தமிழகம், புதுச்சேரியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை பெய்கிறது. கடந்த நவம்பரில் 3 முக்கிய வானிலை மாற்றங்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது.

தமிழகத்தில் கனமழை பெய்ததால், நீர்ப் பிடிப்பு பகுதி, நீர்நிலைகளில் வெள்ளம் புகுந்தது. இந்தப் பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்கள் குறித்து உள்ளூர் அதிகாரிகள்தான் ஆய்வு செய்ய வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக கனமழை தொடர்பாக 3 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை செய்யப்பட்டது.

வெள்ள பாதிப்பு அபாயம் நிறைந்த நகரங்கள், தொழிற்பகுதிகள், கடலோர, நதியோர மாவட்டங்களில் நகர வடிவமைப்பு, கழிவுநீர் வெளியேற்றம், மழைநீர் வடிகால் ஆகியவற்றில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. சில இடங்களில் ஆக்கிரமிப்புகளும் முக்கிய பிரச்சினையாக உள்ளன.

சென்னையில் பெய்த கனமழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது ஆகியவற்றால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன என்றார்.

வரலாறு காணாத அளவில் சென்னையில் பெருமழை பெய்வது குறித்து போதுமான முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை; இது இயற்கைப் பேரிடரே என்கிறது தமிழக அரசு. ஆனால் தொடர்ந்து முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் தமிழக அரசுதான் போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டது; செம்பரம்பாக்கம் ஏரியில் திடீரென அதிக அளவு நீர் திறக்கப்பட்டது; ஆகையால் இது செயற்கைப் பேரிடர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிரகாஷ் ஜாவ்டேகர் இந்தக் கருத்தைத்தெரிவித்துள்ளார்.