தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதேபோல் வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலைநிலவுகிறது. அதே இடத்தில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும் நீடிக்கிறது.
ஆதலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும். சில இடங்களில் கன மழையும் பெய்யலாம். தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் சில இடங்களில் 20 செ.மீ., வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



