தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவது தமிழகத்திற்கு இழைக்கும் துரோகம்: விகடன் குழுமத்துக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை:

திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவது, தமிழகத்துக்கு செய்யும் துரோகம் என்று விகடன் குழும தலைவர் பா.சீனிவாசனுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஏற்கெனவே, விகடன் நிறுவனத்தை திமுக வாங்கிவிட்டது, கையகப் படுத்தி விட்டது, பங்குகளை வாங்கியிருக்கிறது என்றெல்லாம் செய்திகள் பரப்பப் பட்டு வரும் நிலையில், இத்தகைய அறிவுரைக் கடிதத்தை ராமதாஸ் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதம்:

அன்புள்ள திரு. பா. சீனிவாசன் அவர்களுக்கு…
வணக்கம்!

விகடனின் அடையாளமாய் வாழ்ந்து மறைந்த தங்களின் தந்தை எஸ். பாலசுப்ரமணியனின் முதல் நினைவு நாளையொட்டி ஜூனியர் விகடன் இதழில், ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் எழுதியிருந்த ‘ஞானத் தகப்பன்’ என்ற தலைப்பிலான நினைவாஞ்சலிக் கட்டுரையைப் படித்தேன். அமரர் எஸ். பாலசுப்ரமணியன் மீதான எனது மரியாதை மேலும் அதிகரித்தது.

‘பாலு’ என் இனிய நண்பர். படப்பையில் உள்ள அவரது பறவைப் பண்ணைக்கு என்னை அழைத்துச் சென்று பல வகையான பறவைகளை காட்டியதுடன், அவற்றின் சிறப்புகளையும் விளக்கியிருக்கிறார். பழகுவதற்கு மென்மையானவரான அவர், ஊடக ஆசிரியர் என்ற முறையில் துணிவின் சிகரமாக திகழ்ந்தார். வானளாவிய அதிகாரம் கொண்டவர்களாக கூறிக் கொண்டவர்களையெல்லாம் தரைமட்டத்திற்கு சரித்த துணிவுக்கு சொந்தக்காரரான ‘பாலு’வால் உருவாக்கப்பட்டு, வார்த்தெடுக்கப்பட்ட ஜூனியர் விகடன் இதழ் தொடங்கிய நாள் முதல் இன்று வரை அடக்குமுறைக்கு அஞ்சியதில்லை. கடந்த நான்கரை ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த அவலங்கள், ஊழல்கள் பற்றிய உண்மைகளை தைரியமாக மக்களிடம் கொண்டு சென்று சேர்த்த பெருமை விகடனுக்கு உண்டு. இதை நானே பல தருணங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்; பாராட்டியும் இருக்கிறேன்.

ஆட்சியின் தவறுகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்துவதுடன் முடிந்து போவதில்லை மக்கள் நலன் விரும்பும் ஒரு பத்திரிகையின் பணி. தவறுகளும், ஊழல்களும் நடக்காத நல்லாட்சியை எந்தக் கட்சித் தரும் என்பதை அடையாளம் காட்டுவதும் ஒரு நல்ல நான்காவது தூணின் பணி தான். விகடன் குழுமம் அதன் கடமையில் முதல் பாதியை சிறப்பாக செய்யும் அதேவேளையில் இரண்டாவது பாதியை அதன் மனசாட்சிப்படி கூட சரியாக செய்யவில்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

ஒரு காட்டில் ஆபத்தான இரு பள்ளங்களும், பாதுகாப்பாக வாழ்வதற்காக ஓர் இல்லமும் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பள்ளத்தில் விழுந்த அப்பகுதி மக்களால் இன்னும் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. ஒரு பள்ளத்தில் இருந்து மீண்டு வரும் மக்கள், அருகில் உள்ள இன்னொரு பள்ளத்தில் வீழ்வதும், அந்தப் பள்ளத்திலிருந்து ஐந்தாண்டு போராட்டத்திற்குப் பிறகு மீண்டு, பின்னர் அடுத்த பள்ளத்தில் வீழ்வதும் வாடிக்கையாகி விட்டது. 50 ஆண்டுகளாக அனுபவித்தது போதும், இந்த முறையாக மீண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் ஏங்குகின்றனர். அந்த இடத்தில் இருக்கும் வழிகாட்டி தான், அங்குள்ள இரு பள்ளங்களைத் தாண்டி பாதுகாப்பான ஒரு இல்லம் இருக்கிறது என்பதை மக்களுக்கு காட்ட வேண்டும். ஆனால், பாதுகாப்பான இல்லத்துக்கு செல்லும் பாதையை வழிகாட்டியே மறைத்து, தஞ்சம் தேடும் மக்களை மாற்றி மாற்றி குழிக்குள் தள்ள துடிக்கிறாரோ? என்ற ஐயம் சில காலங்களாகவே எனக்குள் உருவெடுத்திருக்கிறது. இதில் வரும் மக்கள் தான் தமிழக மக்கள் என்பதும், இரு பள்ளங்களும் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சி என்பதும், பாதுகாப்பான இல்லம் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்பதும், இவற்றுக்கெல்லாம் மேலான வழிகாட்டியாக செயல்படுவது ஜூனியர் விகடன் உள்ளிட்ட ஊடகங்கள் தான் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதை நான் உங்களுக்கு விளக்கிக் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதிலும் குறிப்பாக, தமிழக அரசியல் நிலவரம் குறித்து கடந்த நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் ஜூனியர் விகடன் வெளியிட்ட 4 கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பார்க்கும் போது எனது ஐயம் அதிகரித்திருக்கிறது. ஐம்பதாண்டு கால திராவிடக் கட்சி ஆட்சி எனும் துயரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பம். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சி தான் தொடர வேண்டும் என்று 57.19% மக்கள் விரும்புவதாகக் கூறி ஒரு கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டு, தமிழக மக்கள் தீய சக்திகளாக கருதும் இரு திராவிடக் கட்சிகளையும் தூக்கிப் பிடித்திருக்கிறீர்கள்.

இன்னொரு கருத்துக் கணிப்பில், தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்ற வினாவை முன்வைத்திருந்தீர்கள். அதில் கலைஞருக்கு ஆதரவாக 41.70% பேரும், விஜயகாந்துக்கு ஆதரவாக 13.81% பேரும், வைகோவுக்கு ஆதரவாக 13.43% பேரும், எனக்கு ஆதரவாக 6.58% பேரும், இளங்கோவனுக்கு ஆதரவாக 3.96% பேரும், மற்றவர்களுக்கு ஆதரவாக 20.52% பேரும் வாக்களித்திருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். மூன்றாவதாக அடுத்த வாரிசு யார்? என்ற தலைப்பில் ஒரு கருத்துக்கணிப்பு. உட்கட்சி அமைப்பில் நடத்தப்பட வேண்டிய வாக்கெடுப்பை பொது வெளியில் நீங்களே நடத்தி, கலைஞர் முதலமைச்சர் வேட்பாளராகக் கூடாது; ஸ்டாலின் தான் முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக ஒரு கருத்தை திட்டமிட்டு உருவாக்கினீர்கள்.

கடைசியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க.வுக்கு இன்னும் 3% வாக்குகள் மட்டுமே தேவைப்படுவதாகவும், மற்ற கட்சிகளுக்கு குறிப்பிடும்படியாக செல்வாக்கு இல்லை என்று பொருள்படும்படியாகவும் ஒரு கணிப்பை ஜூனியர் விகடன் திணித்திருந்தது. நடுநிலை இதழ் என்று கூறிக்கொள்ளும் விகடன் குழுமம் தி.மு.க.வை இவ்வளவு வெளிப்படையாக ஆதரிக்கும் என்றோ, முரசொலியே கூச்சப்படும் அளவுக்கு கருத்துக்கணிப்புகளை வெளியிடும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமின்றி, அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத மற்ற கட்சிகள் வளரவே கூடாது என்ற தி.மு.க.வின் விருப்பத்திற்கு உரம் போடும் வேலையையும் விகடன் குழுமம் சிறப்பாக செய்கிறது.

இந்த கணிப்புகள் எதுவுமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்பதை கடந்த காலங்களில் விகடன் குழுமம் வெளியிட்ட சில புள்ளி விவரங்களில் இருந்தே விளக்க விரும்புகிறேன். கடந்த ஏப்ரம் மாதத்தில் விகடன் டாட் காம் வாசகர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் 48% வாக்குகளுடன் தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப் பட்டிருந்தது. கலைஞர் 42% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், 10% வாக்குகளுடன் விஜயகாந்த் மூன்றாவது இடத்தையும் பிடித்திருப்பதாக விகடன் டாட் காம் செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியில்,‘‘மீத்தேன் திட்ட பிரச்னை, தேனி நியூட்ரினோ ஆய்வு திட்ட எதிர்ப்பு, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிரான குரல்கள், தமிழக மின்வாரியத்தில் நடைபெறுவதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள், உடன்குடி மின் திட்டம் ரத்தான பிரச்னை என எந்த பிரச்னையாக இருந்தாலும், முதல் அறிக்கை ராமதாஸிடமிருந்துதான் வருகிறது. அதிலும் மின்வாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்த பாமக, அடுத்ததாக தமிழக அரசு இணைய தளங்களில் ஜெயலலிதா இன்னமும் முதல்வராகவே சித்தரிக்கப்பட்டு, அவரது புகைப்படம் இருப்பதையும், தமிழக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், நிதி நிலையின் அறிக்கையின் ஒவ்வொரு வார்த்தையும், சொல்லும் ‘அம்மா’வின் ஆலோசனையின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டி, பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்திற்கு மாறாக நடந்து கொண்டதாக கூறி அதிமுக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் ஒரு மனுவை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவருக்கு மனு அனுப்பி உள்ளது. தற்போது உடன்குடி மின் திட்டம் ரத்தான பிரச்னையையும் பாமக தீவிரமாக எடுத்துக்கொண்டு கொடுக்கும் குடைச்சல்தான் அ.தி.மு.க. அரசுக்கு தீரா தலைவலியாக உருவெடுத்துள்ளது’’ என்று பாராட்டி எழுதப்பட்டிருந்தது.

அதே கட்டுரையில்,‘‘திமுக தலைவர் கருணாநிதியும் இத்தகைய பிரச்னைகளை கையில் எடுத்தாலும், கடந்த காலங்களை போன்று முதல் குரலாக வரவில்லை. போராட்டக்களத்திலும் முன்னணியில் இல்லை. அதிலும் மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சி காலத்தில்தான் ஒப்புதல் கொடுக்கப்பட்டது என்பதால், இந்த பிரச்னையில் திமுகவின் எதிர்ப்பு சுரத்தில்லாமல் போனது மட்டுமல்லாது, ‘உங்கள் ஆட்சி காலத்தில்தானே ஒப்புதல் அளித்தீர்கள்’ என்று எதிர்ப்பு, அக்கட்சிக்கு எதிராகவே பூமராங்காக திரும்பியது’’ என்று கூறப்பட்டிருந்தது. 6 மாதங்களுக்கு முன்பு ஒரு எதிர்க்கட்சித் தலைவராகவே செயல்படவில்லை என்று விகடன் குழுமத்தால் விமர்சிக்கப்பட்டிருந்த கலைஞர் இப்போது சிறந்த எதிர்க்கட்சித் தலைவராகியிருப்பதும், சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக பாராட்டப்பட்ட நான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டதும் எப்படி? என்பது உங்களின் ஆசிரியர் குழு மட்டுமே அறிந்த இரகசியம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் லயோலா கல்லூரி சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் தி.மு.க.வுக்கு சாதகமாக, குறிப்பாக மு.க. ஸ்டாலினை முன்னிலைப் படுத்தும் வகையில் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதுமட்டுமின்றி, பா.ம.க.வின் வலிமை குறைத்து காட்டப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே அது ஸ்டாலினுக்காக அவரது ஆதரவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு என்பது அம்பலமானது. பா.ம.க.வுக்கு சாதகமான பல அம்சங்களை நாங்கள் வெளியிடாமல் மறைத்து விட்டோம் என்பதை கருத்துக்கணிப்பை நடத்திய பேராசிரியர் இராஜநாயகம் ஒப்புக்கொண்டார். இப்போது விகடன் வெளியிட்ட கருத்துக் கணிப்பும் அப்படிப்பட்ட ஒன்றே என்று பலரும் பேசுகின்றனர்.

விகடன் நடுநிலை தவறாத இதழ் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால், நடுநிலை என்பது அ.தி.மு.க.வுக்கு ஒரு செய்தி போட்டால் தி.மு.க.வுக்கு ஒரு செய்தி போட வேண்டும் என்பது அல்ல. எத்தனை செய்தி போட்டாலும் அது மக்களுக்கு நலன் பயப்பதாக இருக்க வேண்டும் என்பது தான் நடுநிலை ஆகும். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பெரும் சீரழிவை சந்தித்து வரும் நிலையில், அதற்கு மாற்று தி.மு.க. தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது நடுநிலை அல்ல. கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சி செய்த போது தமிழகம் எத்தகைய சீரழிவுகளை சந்தித்தது என்பதையும் ஆய்வு செய்து, இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகம் செழிக்கும் என்பதை ஒவ்வொரு கட்சியும் முன்வைத்துள்ள செயல்திட்டம் மற்றும் அவற்றின் கொள்கை அடிப்படையில் தீர்மானித்து மக்களிடம் முன் வைப்பது தான் நடுநிலை ஆகும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட விகடன் போன்ற ஊடகங்கள் இதைத்தான் முதல் கடமையாக கருத வேண்டும்.

அ.தி.மு.க. அரசின் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால், அ.தி.மு.க.வுக்கே வலிக்காத அளவுக்கு உங்கள் விமர்சனம் அமைந்திருந்தது. 1991&96 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து ஒவ்வொரு வாரமும் ஒரு புலனாய்வுக் கட்டுரை வெளியாகும். செல்வாக்கு மிக்க ‘சக்தி’ சென்னையிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மாற்றார் சொத்துக்களை மிரட்டி வளைத்தது குறித்து ஆதாரங்களுடன் செய்திகள் வெளிவரும். அப்போது அ.தி.மு.க.வின் ஊழல்களை அம்பலப் படுத்தி ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை உருவாக்கியதில் விகடனுக்கு பெரும்பங்கு உண்டு. இவையெல்லாம் எனது நண்பர் ‘பாலு’வின் இதழியல் துணிச்சலுக்கு உதாரணம். அப்போது விகடன் குழும இதழ்களுக்கு அவர் தான் ஆசிரியராக இருந்தார். 1991-96 காலத்தை விட 2001-06 காலத்தில் அ.தி.மு.க.வின் ஊழல்கள் 10 மடங்கு அதிகரித்தது. 2011-16 காலத்தில் 100 மடங்கு அதிகரித்தது. ஆனால், 1991-96 காலத்தில் 100% ஆக அ.தி.மு.க. ஊழல்கள் குறித்த விகடனின் விமர்சனம் 2001-06 காலத்தில் 10% ஆகவும், 2011-16 காலத்தில் 1% விழுக்காடாகவும் குறைந்து விட்டது.

இன்னொரு புறம் தி.மு.க. புனிதமான கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஜூனியர் விகடன் குழுமம் ஈடுபட்டிருக்கிறது. கடந்த காலங்களில் தி.மு.க. மிக மோசமான ஆட்சியைத் தான் வழங்கியிருக்கிறது. ஆனால், அதையெல்லாம் மறந்து விட்டு… இல்லை…இல்லை மறைத்து விட்டு அக்கட்சியை விகடன் வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலைக்கு விகடன் குழுமம் தள்ளப்பட்டது ஏன்? தி.மு.க. தமிழகத்தின் ஆகச்சிறந்த நல்ல கட்சியாக மாறி விட்டதா? தி.மு.க. இதுவரை எந்த ஊழலையும் செய்யவில்லையா? தி.மு.க. அரசு மீதான 28 குற்றச்சாற்றுக்கள் குறித்து விசாரணை நடத்திய சர்க்காரியா கமிஷன்,‘‘விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் தி.மு.க. கைதேர்ந்தது என சான்று அளித்ததே?’’ மறந்து விட்டதா?

உலகின் மிகப்பெரிய ஊழலாக கருதப்படும் 2-ஜி ஊழலின் சூத்திரதாரி தி.மு.க.வும், தி.மு.க. தலைவரின் குடும்பமும் தானே. 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.இராசா 469 நாட்களும், கலைஞரின் மகள் கனிமொழி 193 நாட்களும் பிணை கூட கிடைக்காமல் தில்லி திகார் சிறையில் அடைபட்டுக் கிடந்தார்களே?

முந்தைய தி.மு.க. அரசின் அமைச்சர்களாக இருந்தவர்களில் 16 பேர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்களே?

இவை அனைத்திலும் இருந்து தி.மு.க. புனிதம் பெற்று விட்டதால் அக்கட்சியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

சென்னையில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கு காரணம் யார்? தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தானே? ஏரிகளையும், நீர்வழிப் பாதைகளையும் இரு கட்சியினரும் ஆக்கிரமிப்பு செய்ததன் விளைவாகத் தானே மழை நீர் ஓட வழியில்லாமல் சென்னையை சூழ்ந்தது.

50 ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த அனைத்து சீரழிவுகளையும் தொடங்கி வைத்ததுடன், முதன்மை பங்குதாரராகவும் திகழ்ந்தது தி.மு.க. தானே? அதை மறுக்க முடியுமா? இத்தனை உண்மைகளையும் உணர்ந்திருந்தும் முரசொலியை விட அதிகமாக தி.மு.க. புராணம் பாடுகிறீர்களே? விகடன் இதழ்களில் விகடன் தாத்தா படத்திற்கு பதிலாக கலைஞரின் படத்தை போடாதது மட்டும் தான் பாக்கி. அந்த அளவுக்கு விகடன் குழுமத்தை தி.மு.க.வின் குடும்ப இதழ்களாக மாற்றி விட்டீர்களே…இது சரியா?

அ.தி.மு.க. ஊழல் பெருங்கடல் என்றால், ஊழலில் ஊற்றுக்கண் தி.மு.க. ஆகும். கலைஞர் என்பவர் வேட்டி கட்டிய ஜெயலலிதா. ஜெயலலிதா என்பவர் சேலை கட்டிய கலைஞர். அவ்வாறு இருக்கும் போது அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டிய கட்சிகள். அவ்வாறு இருக்கும்போது விகடன் குழுமம் தி.மு.க.வுக்கு வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிப்பது தமிழகத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

ஒருபுறம் தி.மு.க.வை உயர்த்திப் பிடிக்கும் நிலையில், இன்னொருபுறம் பாட்டாளி மக்கள் கட்சியை இருட்டடிப்பு செய்கிறீர்கள். தமிழகத்தின் நலனுக்காக எவ்வளவோ பணிகளை பா.ம.க. செய்தாலும் அவை மக்களிடம் சென்றுவிடக்கூடாது என்பதில் கலைஞரை விட நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்ததைத் தவிர பாட்டாளி மக்கள் கட்சி எந்த தவறையும் செய்யவில்லை. அதேநேரத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் அந்த கட்சியின் தவறுகளை தட்டிக்கேட்கத் தயங்கியதில்லை. 1991 ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவது பா.ம.க. தான். பா.ம.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 8 மாதங்களில் 7 மண்டல மாநாடுகளை வெகு சிறப்பாக நடத்தியிருக்கிறோம். பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழகம் முழுவதும் பலமுறை பயணம் மேற்கொண்டு கோடிக்கணக்கான மக்களை சந்தித்திருக்கிறார். லட்சக்கணக்கான இளைஞர்கள் பா.ம.க.வில் தாமாக முன்வந்து இணைந்திருக்கின்றனர். மதுவிலக்கு உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரச்சினைக்காகவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான்.

பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக படித்தவரை அறிவித்திருக்கிறோம். அவர் இளைஞர். மத்திய அமைச்சராக இருந்த போது உலகமே வியக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார். அவரது முயற்சியில் தயாரித்து வெளியிடப்பட்ட வரைவுத் தேர்தல் அறிக்கையில் தமிழகம் எதிர்கொண்டு வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வலிமையான தீர்வுகளை முன்வைத்திருக்கிறோம். ஓர் ஊடகமாக இவற்றையெல்லாம் தமிழக மக்களிடம் விகடன் கொண்டு சென்றிருந்தால் மக்கள் நலனில் அது கொண்டிருக்கும் அக்கறையை புரிந்து கொள்ள முடியும். ஆனால், அப்படி செய்ய விகடன் குழுமம் தவறிவிட்டது. இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் பா.ம.க.வை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும்படி நான் கோரவில்லை. மாறாக அனைத்து கட்சிகளின் செயல்பாடுகள், செயல்திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை ஆராய்ந்து மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தான் கோருகிறேன். ‘பாலு’ அவர்கள் இருந்திருந்தால் இதைத் தான் செய்திருப்பார்.

மறைந்த ‘பாலு’ அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்ட நாளில் இருந்தாவது தமிழகத்தில் மக்கள் விரும்பும் மாற்று அரசை அமைக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்கும்படி கோருகிறேன்.

அதைவிடுத்து தி.மு.க.வின் விருப்பங்களை மட்டும் நிறைவேற்றும் கருவியாக விகடன் குழுமத்தை மாற்றிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விகடனை வளர்த்தெடுத்த ‘பாலு’ பறவைகள் மீது பற்று கொண்டவர். அதன்காரணமாக பறவைப் பண்ணை அமைத்து அவற்றுடன் காலத்தை கழித்தவர். பறவைகளுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதற்காக அவற்றை அவர் அடைத்து வைத்ததில்லை. அப்படிப்பட்டவர் தனது குழந்தையைப் போல வளர்த்தெடுத்த ஊடகங்கள், தமிழகத்தை சிதைத்த, சீரழித்த ஒரு கட்சியின் பிடியில் அடைபட்டு கிடப்பதை விரும்பமாட்டார்.

– என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.