தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்த தனது விமர்சன சர்ச்சைக்கு இளங்கோவன் வருத்தம்

சென்னை:
பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனையோ அல்லது கரகாட்டம் ஆடுகிற கலைஞர் பெருமக்களையோ புண்படுத்த வேண்டுமென்பது எனது நோக்கமல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக பாஜக வின் தலைமைப் பொறுப்பை வகிக்கின்ற தமிழிசை சவுந்தரராஜன் எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் இயக்கத்தின் மீதும், சோனியா காந்தி மீதும் பழிபோட்டு பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். மத்திய பாஜக அரசு மீது விமர்சிக்கின்ற போதெல்லாம் அதற்குரிய பதிலை சொல்லாமல் காங்கிரஸ் தலைவர்களை வசைபாடுவது குறித்து பலமுறை விமர்சனம் செய்திருக்கிறோம்.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப ஒருவர் கூறுவதைப் போல ஒரே மாதிரியாக நடன அசைவுகளைக் கொண்டு திரும்பத் திரும்ப ஆடுகிற கரகாட்டக்காரர்கள், பொய்கால் குதிரை ஆட்டக்காரர்களைப் போல தமிழிசை சவுந்தரராஜனுடைய கருத்து ஒரே மாதிரியாக இருப்பதாக மேற்கோள் காட்டி பேசினேன்.

அந்த அடிப்படையில் தான் அந்த ஒப்பீடு இருந்ததே தவிர, சகோதரி தமிழிசை சவுந்தரராஜனையோ அல்லது அத்தகைய ஆட்டத்தை ஆடுகிற கலைஞர் பெருமக்களையோ புண்படுத்த வேண்டுமென்பது எனது நோக்கமல்ல.

தனிப்பட்ட முறையில் தமிழிசை சவுந்தரராஜனுடைய அரசியல் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததோடு, அவர்மீது அன்பையும், பாசத்தையும் வைத்திருக்கிறேன். நான் பேசிய ஒப்பீட்டை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் அவரது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இளங்கோவன் கூறியுள்ளார்.