கிறிஸ்துவர்களுக்கு கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அவரது வாழ்த்துச் செய்தி:
கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

ஏழை எளியவர்பால் இரக்கம் கொண்டு அன்பையும், கருணையையும் பொழிந்த திருமகன் இயேசு பெருமான் பிறந்த பொன்னாளாகிய டிசம்பர் 25ஆம் நாளை கிருஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிருஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஆட்சியில் இருந்த காலத்தில் மட்டுமல்லாமல், ஆட்சியில் இல்லாத காலத்திலும் தமிழகத்தில் வாழும் கிருஸ்துவ சமுதாய மக்களின் நலன் காப்பதில் மிகுந்த முன்னுரிமை தந்து வந்துள்ளது.

பேரறிஞர் அண்ணா அவர்களைத் தொடர்ந்து 1969இல் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், மதம் மாறிய ஆதிதிராவிட கிருஸ்துவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகையை 1974ஆம் ஆண்டில் வழங்கி நடைமுறைப்படுத்தினேன். 1975ஆம் ஆண்டில் மதம் மாறிய ஆதிதிராவிடர் கிருஸ்துவர்களின் அனைத்துத் தலைமுறைகளுக்கும் அச்சலுகையை நீட்டித்து வழங்கி ஆணை பிறப்பித்தேன்.

2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட “தமிழ்நாடு கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்”இந்திய அரசியல் சாசனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையைப் பெரிதும் பாதித்தது. அச்சட்டத்தினை ரத்து செய்ய வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகமும், கிருஸ்துவ, இஸ்லாமியத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டங்கள் நடத்தியும், எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. ஆனால், 2006ல் முதலமைச்சராக நான் மீண்டும் பதவி ஏற்ற 18ம் நாளிலேயே, அதாவது 31.5.2006 அன்று சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றி, மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்தேன்.

இப்படிப் போராடியும் கிடைக்காத பல உரிமைகளைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தவுடன் கிறித்தவர்களுக்கும், சமுதாயத்தில் பல்வேறு பிரிவினருக்கும் வழங்கியது – தொடர்ந்து துணை நிற்பது திராவிட முன்னேற்றக் கழகமே என்பதை நினைவுபடுத்தி, இப்பெரு நாளில் கிறித்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.