அதிமுக.,வினர் 2வது நாளாக தொடர்ந்து இன்றும் சர்கார் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், சர்கார் படத்தின் காலை காட்சிகள் பல்வேறு நகரங்களில் ரத்து செய்யப்பட்டன. சில இடங்களில் மதியம், மாலைக் காட்சிகளும் ரத்தாகின. திருத்தங்கள் செய்யப் பட்டு, பிறகே படம் ஓடும் நிலை சில இடங்களில் ஏற்பட்டுள்ளது.
தஞ்சையில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள சாந்தி திரையரங்கு முன்பு அதிமுக.,வினர் காலையிலேயே திரண்டனர். ஜெயலலிதா பெயரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள், அரசின் இலவச பொருட்களுக்கு எதிரான காட்சிகளை நீக்கும் வரை சர்கார் படத்தை திரையிடக்கூடாது என முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து காலை காட்சியை ரத்து செய்வதாக சாந்தி திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. இதேபோல் தஞ்சையில் ஜூபிடர் திரையரங்கிலும் சர்கார் காலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கார்த்திகேயன் மற்றும் பாபு திரையரங்கத்தில் இதே போல் பிரச்னை நீடித்தது. சேலத்தில் ஏ.ஆர்.ஆர் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயின் பேனர்களை கிழித்து எறிந்தனர். திரையரங்க அலுவலத்திற்குள் நுழைந்து படத்தை திரையிடுவதை நிறுத்துமாறு கோரினர். மேலும், அடுத்த காட்சிக்கு டிக்கெட் கொடுப்பதையும் தடுக்கும் வகையில், டிக்கெட் கௌன்ட்டர் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதை அடுத்து, சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே அடுத்த காட்சி திரையிடப்படும் என்று திரையரங்கு சார்பில் தெரிவிக்கப் பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சத்யா திரையரங்கிலும், எஸ்.வி.ராம் திரையரங்கிலும் இதே போல் போராட்டம் நடைபெற்றது. எஸ்வி ராம் திரையரங்கினுள் நுழைந்த சிலர் காட்சியை நிறுத்தியதோடு திரையரங்க மேலாளரையும் தாக்கினர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் விஜயா, கோமதி திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.




