கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 820 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், கஜா புயல் 15ஆம் தேதி நாகை – சென்னை இடையே முற்பகலில் கரையை கடக்கக்கூடும் என்றும், அப்போது, மணிக்கு 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. #CycloneGaja
கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு வரும் 15ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளார்.
தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 14ம் தேதி மாலை முதல் கன மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கஜா புயல் எதிரொலியாக மீன்பிடிக்கத் தடைவிதிக்கப் பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கத் தடை தொடரும்! கஜா புயலை எதிர்கொள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
புயல் குறித்த தகவல்களை உடனுக்குடன் மீனவர்களுக்குத் தெரிவிக்க, 24 மணி நேரம் இயங்கும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
மீனவர்கள் அனைவரும் அவர்களது அலைபேசி மூலம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு விவரங்களை தெரிந்துகொள்ளவேண்டும்.
புயல் உருவாகும் முன், ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகச் சென்ற தங்குகடல் மீன்பிடி விசைப்படகுகளை பத்திரமாக கரை திரும்பிட ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. – என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டிருந்தது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள கஜா புயலால் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து 500 க்கும் விசைப்படகுகள், பைபர் படகுகளை மீனவர்கள் தேங்காய்திட்டு துறைமுக பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.




