கஜா புயலை சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கஜா புயலை சமாளிக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் போது, புயலால் சேதம் அடையும் மின் கம்பங்களை உடனடியாக சீரமைத்தல், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சாயும் மரங்களை விரைந்து அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, பள்ளிகளில் தற்காலிக நிவாரண முகாம்களை அமைப்பது, மீனவர்களுக்கான எச்சரிக்கை, புயல் பாதிப்பு பகுதிகளில் நோய்த் தொற்று பரமாவல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.