ஜேட்லி விவகாரத்தில் சோனியா தூண்டவில்லை: கீர்த்தி ஆசாத் மறுப்பு

புதுதில்லி:

தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் முறைகேட்டில் ஜேட்லி தொடர்பான விவகாரத்தை நாடாளுமன்ற அவையில் கிளப்ப சோனியா காந்தி தூண்டவில்லை என பாஜ எம்பி கீர்த்தி ஆசாத் மறுத்துள்ளார்.

தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் அருண் ஜேட்லி மீது குற்றம் சாட்டிய பாஜ எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத், பின்னர் அதை நாடாளுமன்ற அவையிலும் எழுப்பினார்.

அதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினரும் இந்த விவகார்ததை கிளப்பினர். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு தான் கீர்த்தி ஆசாத் இதை கிளப்பியுள்ளார் என பாஜ கட்சியின் உள்ளே இருந்தும், வெளியில் இருந்தும் கீர்த்தி ஆசாத் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்ற அவையில் தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தை கிளப்ப வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியாதான் மறைமுகமாக எனக்கு உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. அரசின் ஆதரவுடன் சபாநாயகர் ஒப்புதலுக்கு பிறகுதான் ஊழலுக்கு எதிராக பேசினேன்.

வேறு யாரும் எனக்கு உத்தரவிட வில்லை. ஆனால் நான் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக என் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அவையில் அமளியில் ஈடுபடுவதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.