அரசியலில் அனைவரும் நேர்மை, நாகரிகத்தை, பின்பற்ற வேண்டும் : வைகோ

 
சென்னை ராணி சீதை அரங்கில் நேற்று நடைபெற்ற வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் எழுதிய ‘அண்ணா அருமை அண்ணா’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் அண்ணாவின் மருமகள் விஜயா உள்ளிட்ட உறவினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் இரா.செழியன் தலைமை தாங்கினார். முதல் பிரதியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே பெற்றுக் கொண்டார்.
நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பேசியதாவது:-
தமிழ் குலத்திற்கு உலக அரங்கில் அடையாளம் பெற்றுத்தந்தவர் அண்ணா. அரசியலை தாண்டி தொலைநோக்கோடு அரசியல் நாகரிகம், அரசியல் தீண்டாமை போன்றவற்றுக்கு உதாரணமாகவும் திகழ்ந்தார். அண்ணா பின்பற்றிய அரசியல் நேர்மை, நாகரிகம், எளிமையான வாழ்க்கை தற்போதைய அரசியல்வாதிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அவருடைய சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும். அவர் குறித்து ஜி.விஸ்வநாதன் எழுதிய புத்தகம் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது. என்று வைகோ பேசினார்.
நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் ஜி.விஸ்வநாதன் பேசியதாவது:-
தமிழகத்துக்கு வெளியே அரசியல் நாகரிகம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை, அவை மீண்டும் வரவேண்டும். பிறரை மதிக்கும் பெருந்தன்மைக்கு அண்ணா ஒரு முன்உதாரணமாக இருந்தார். தற்போதைய சூழ்நிலையில் பிறநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா கல்வியில் பின்தங்கி உள்ளது. இந்தியா வளரவில்லை என்று கூறவில்லை, வளர்ச்சி போதாது என்று கூறுகிறேன். தமிழகத்திலும் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவில்லை என்றால் நமக்கு எதிர்காலம் இல்லை. எனவே அரசியல் கட்சிகள் கல்வி மேம்படுவதற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டும். என்று ஜி.விஸ்வநாதன் பேசினார்.
விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன்,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பேசினர். கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசன் நன்றி கூறினார்.