தில்லிக்குள் கனரக வாகனங்கள் நுழையத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

புதுதில்லி:

காற்று மாசைக் கட்டுப்படுத்த தில்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்குத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தில்லியில் காற்று மாசுபாடு அளவுக்கு அதிகமாக உள்ளது. எனவே, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை தில்லி மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளிலும் சாலையில் செல்ல அனுமதிக்கும் திட்டத்தை 15 நாட்களுக்கு தில்லி அரசு அறிமுகப்படுத்தியது. சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் ஜன.1ம் தேதி முதல் தொடங்கியது. வருகிற 15-ந்தேதி வரை 15 நாட்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும். இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

பெண்களால் ஓட்டப்படும் கார்கள், சி.என்.ஜி. வாயு என்ஜின் பொருத்தப்பட்ட கார்கள், பேட்டரியால் இயங்கும் கார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆம்புலன்சு வண்டிகள், தீயணைப்பு வண்டிகள், ஆட்டோ ரிக்‌ஷா, பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வி.ஐ.பி. வாகனங்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கனரக வாகனங்கள் தில்லிக்குள் நுழைய உச்ச நீதிமன்றம் தடைவிதித்து செவ்வாய்க்கிழமை நேற்று உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 2,10.58 மற்றும் தில்லி நெடுஞ்சாலை 57 ஆகியவற்றின் வழியாக தில்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், தில்லியில் பதிவு செய்யப்பட்டுள்ள கனரக வாகனங்கள் மட்டும் காற்று மாசுபாட்டுக்கான அபராதவரி செலுத்தி தில்லிக்குள் நுழையலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரம் சி.சி.க்கும் அதிகமான இழுவைத்திறன் கொண்ட டீசல் வாகனங்கள் தில்லிக்குள் நுழைய அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வாகன உற்பத்தியாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும் உச்ச நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.